விதுர நீதி!

புராண காலம் தொடங்கி, இன்றைய நவீன காலம் வரை எவ்வளவோ அமைச்சர்கள் தங்கள் மதிநுட்பத்தை பல்வேறு விதமாக, பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால், திருதராஷ்டிரன் அமைச்சரவையை அலங்கரித்த விதுரன் போன்ற மதிநுட்பமும், நேர்மையும், யாருக்கும் அஞ்சாமல் நல்லவற்றை எடுத்துரைத்தல் போன்றவற்றில் விதுரனுக்கு இணையாக சொல்லக்கூடியவர்கள் வெகு சிலரே! காலத்தை வென்று நிற்கும் விதுரநீதி, இன்றைய அரசியல்வாதிகளுக்கு மிகவும் பொருந்தக்கூடியது! விதுரநீதியில் லட்சத்தில் ஒரு பங்கு நமக்கு கைகூடினாலும் அது நாம் செய்யும் பாக்கியமே!


Monday, October 4, 2010

அமைதி விரும்பிகள்!

ஆதிகாலத்தில் “மதம்” பிடித்து திரிந்த மனிதனை முறைப்படுத்த வந்ததுதான் மதம்! உலகின் எந்த மதமாக இருந்தாலும், அடிப்படையான சில கோட்பாடுகள் ஒன்றாகவே இருப்பதை நாம் காணலாம். இந்து மதம், யூத மதம், அதில் இருந்து உருவான கிருத்தவ மதம், இஸ்லாமிய மதம், புத்த மதம் ஆகிய மதங்கள்தான் உலகம் முழுவதும் பிரதானமாக பின்பற்றப்படுகிறது. நமது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் எந்த மதமும் வன்முறையை ஆதரித்தது இல்லை.

ஆனால், மதத்தைப் பரப்பும் அல்லது காப்பாற்றும் முயற்சியில் நடைபெற்ற சிலுவைப் போர்கள், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக் மற்றும் மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளில் இன்றைக்கும் நடைபெறும் வன்முறைகள், அமைதி ஒன்றையே அடிப்படையாகக் கொண்ட புத்த மதம் பின்பற்றப்படும் கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, வியட்நாம், மியான்மர் மற்றும் பல நாடுகளில் நடைபெற்ற வன்முறைகள் என உலகம் முழுக்க மதத்தின் பெயரால், வன்முறைகளும் கொலைகளும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

நமது நாட்டிலும் மதத்தின் பெயரால் எண்ணற்ற வன்முறை சம்பவங்கள் நடந்து, அதன்மூலம் கணக்கற்ற மக்களின் உயிரையும் உடைமையும் இழந்திருக்கிறோம். ஆனால், நீண்ட காலத்திற்குப் பிறகு, இந்திய மக்களின் அமைதியை விரும்பும் குணமும், சகிப்புத்தன்மையும் அற்புதமாக வெளிப்பட்டதைக் காண முடிந்தது.

நவீன இந்தியாவில் மிக முக்கியமான நாட்கள் பட்டியலில் செப்டம்பர் 29-ந் தேதிக்கு குறிப்பிட்ட இடம் நிச்சயமாக உண்டு. அறுபது ஆண்டுகளுக்கு மேலாக சட்டப்படியான தீர்வை எதிர்பார்த்துக் கொண்டிருந்த இரண்டு சமுதாய மக்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இந்தியாவும் ஒருவித பதட்டத்தோடும் படபடப்போடும் காத்துக் கொண்டிருந்த நாள்! இந்திய மக்கள் அமைதி விரும்பிகள் என்பதை உலகுக்கு மீண்டும் ஒருமுறை அழுத்தம்திருத்தமாக நிரூபித்த நாள்!

ஆம்... தீர்ப்பு எப்படி இருக்குமோ, எந்த நேரம் வன்முறை வெடிக்குமோ என்று நாடு முழுக்க ஒருவித பயம் நிலவியதால், மத்திய- மாநில அரசுகளால் லட்சக்கணக்கில் பாதுகாப்பு படைவீரர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர். ஆனால், உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல், சட்டத்தின் முடிவை இருதரப்பினரும் அமைதியாகவும், ஆரவாரம் ஏதுமின்றியும் ஏற்றுக்கொண்ட விதம், ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற முன்மாதிரியை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது.

நாடு சுதந்திரம் பெற்றபோது நடைபெற்ற மதக்கலவரங்களால் மிகவும் நொந்து போன மகாத்மா காந்தியடிகள், கிட்டத்தட்ட நடைபிணமாகவே மாறிவிட்டார். அரும்பாடு பட்டு பெற்ற சுதந்திரத்தை ஒரே வருடத்தில் இப்படி பாழடிக்கிறார்களே என்ற வேதனை அவரை நிலைகுலையச் செய்து விட்டது. அவரது பிறந்தநாளை கொண்டாடும் இத்தருணத்தில் இந்திய மக்கள் நடந்து கொண்டவிதம், முதல் முறையாக அவரது ஆன்மாவை சாந்தி அடைய செய்து இருக்கும்.

எந்த ஒரு மனிதனுக்கும் நிம்மதியான- அமைதியான- சந்தோஷமான வாழ்க்கை தான் குறிக்கோளாக இருக்க முடியும். எந்த ஒரு மதமும், மத குருவும் அதற்கான வழியைத்தான் காட்ட வேண்டும். அதை விடுத்து, ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்பி விட்டு, அதன்மூலம் எரியத் தொடங்கும் நெருப்பில் குளிர் காய்பவர்களையும் மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இப்போது நிலவும் அமைதியை என்றென்றும் நிலைபெறச் செய்ய நாம் அனைவரும் உறுதி கொள்ள வேண்டும்!

Tuesday, September 21, 2010

இடிந்து விழுந்தது மேம்பாலம் அல்ல... இந்திய மானம்....

“இதனை இவனால் முடியும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”

-இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் இந்த நாட்டில் என்ன நடக்கும் என்பதை துல்லியமாக கணித்து எழுதியல்தானே, வான்புகழ் வள்ளுவர் தெய்வப்புலவன் என்று போற்றப்படுகிறார்.

எழுபதாயிரம் கோடி ரூபாயை வாணவேடிக்கை விட்டு நடத்தப்படும் காமன்வெல்த் போட்டி அமைப்புக் குழுவினருக்கு என்ன மாதிரியான தகுதி இருக்க வேண்டும் என்று நிர்ணயித்து இருக்க வேண்டாமா? “சுகாதாரக்குறை என்பதெல்லாம் ஒவ்வொருவர் பார்வையிலும் வித்தியாசப்படும்” என்று உளறிக்கொட்டும் செய்தி தொடர்பாளர், நடை மேம்பாலம் இடிந்து விழுந்து நான்கு பேர் உயிருக்கு போராடும் நிலையில், “இது சாதாரண மக்களுக்காக கட்டப்பட்ட நடை மேம்பாலம்தான்” என்று அரக்கத்தனமாக பேசும் டெல்லி முதல்வர், “புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் ஒன்றிரண்டு மின்சார வயர்கள் அப்படி இப்படி கிடப்பதும், கழிவறை சரியாக இல்லாததும், வளாகத்தில் நாய் தொல்லைகள் இருப்பதும் சர்வ சாதாரண விஷயம்தான்” என்று அலட்சியத்தின் உச்சக்கட்டமாக பேசும் அதிகாரி...

இவர்களுக்கெல்லாம் இந்தப் போட்டியை நடத்தும் அளவுக்கு தகுதி இருக்கிறதா என்று முடிவு செய்தது யார்? என்ன அடிப்படையில் அந்த முடிவு எடுக்கப்பட்டது? அரசு அலுவலகங்களில் பியூன் வேலைக்கு ஆள் எடுப்பதற்கே எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்று எத்தனை தேர்வுகள் வைக்கிறார்கள்? அப்படி இருக்கும்போது எழுபதாயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை கையாளப் போகும் நபர்கள் தகுதி எந்த அளவிற்கு இருக்க வேண்டும்?

முதலில் ஒரு விஷயத்தை நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சினை பற்றி ஊடகங்களில் செய்திகள் வெளிவரும்போது எல்லாம், “இது நாட்டின் கவுரவப் பிரச்சினை; எனவே, பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தாமல் போட்டிகள் நல்லவிதமாக நடக்க உதவ வேண்டும்” என்று விளையாட்டு அமைச்சர் எம்.எஸ். கில்லும், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தும், காமன்வெல்த் போட்டி அமைப்பு தலைவர் சுரேஷ் கல்மாடியும் மீண்டும் மீண்டும் கோரஸாக வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

எதோ இந்த விளையாட்டு நடத்தவது என்பது இந்த மூன்று பேருடைய தனிப்பட்ட சாதனை என்பது போன்றே இவர்கள் காட்டிக் கொண்டனர். இது இந்திய தேசத்தால் நடத்தப்படும் போட்டி. இதற்காக எழுபது ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இந்திய நாடு நடத்தும் போட்டி என்ற வகையில், நியாயமாக பிரதமர்தானே இந்தப் போட்டிகளின் நன்மை மற்றும் தீமைகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்? அவரது சார்பில், விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ். கில் தானே முதல் ஆளாக நின்றிருக்க வேண்டும்? விழாக்களில் மட்டும் முதன்மையாக நிற்பதற்கா இந்தப் பதவிகள்?

எதோ ஒரு மூன்றாம் நபர் போலவே பிரதமரும் அவரது அமைச்சரவை சகாக்களும் நடந்து கொள்கின்றனரே, இவர்கள் சற்றே வரலாற்றை திரும்பிப் பார்ப்பார்களா? 1982-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளை இதே டெல்லியில் நடத்திய பொது, இரண்டு வருடமே அவகாசம் இருந்த நிலையிலும், அன்றைக்கு இருந்து ஏகப்பட்ட தொழில்நுட்ப வசதிக் குறைவுகளையும் மீறி, மிகச் சிறப்பாக நடத்தி முடித்தார், இந்திரா காந்தி. அவருக்கு உறுதுணையாக இருந்து போட்டிகளை மிகச் சிறப்பாக நடத்தி முடித்து உலக அரங்கில் இந்தியாவின் கொடியை உயரப் பறக்க வைத்தார், ராஜீவ்காந்தி.

2003-ம் ஆண்டு போட்டி நடத்துவதற்கான அனுமதியைப் பெற்றுவிட்டு, ஏழு வருட அவகாசத்துக்குப் பின்னரும், எல்லாவித தொழில்நுட்ப வசதிகள் இருக்கும்போதும், பட்ஜெட் என்று ஒன்று இல்லாமல் பணத்தை தண்ணீராக செலவழித்தும், இவ்வளவு கேவலமான நிலைமையில் இந்தியாவின் மானத்தை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்களே, கொஞ்சமாவது தார்மீக பொறுப்பு இருந்திருந்தால் இவர்கள் ராஜினாமா செய்து இருக்க வேண்டாமா?

காமன்வெல்த் போட்டி என்ற பெயரில், கோடி கோடியாக கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை இரண்டு மாதங்களுக்கு முன்பே எல்லா ஊடகங்களும் தெள்ளத்தெளிவான ஆதாரங்களுடன் தோலுரித்துக் காட்டினார்களே, அப்போதாவது பிரதமர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? எத்தனையோ திறமையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ள இந்த நாட்டில் கல்மாடியை நீக்கினால் என்ன நடந்து விடும்? பிரதமருக்கு எதற்கு தயக்கம்? அவரை செயல்பட விடாமல் தடுத்தது எந்த சக்தி?

இரண்டு மாதங்களுக்கு முன்னரே பிரதமர் கட்சியை சேர்ந்த மணிசங்கர் அய்யர், “காமன்வெல்த் போட்டிகள் என்ற பெயரில் மன்னிக்க முடியாத தவறுகள் நடக்கின்றன; உலக அரங்கில் நமக்கு பெரும் கெட்டப்பெயரை இது வாங்கித் தந்துவிடும். எனவே, போட்டி நடக்கும்போது நாட்டிலேயே நான் இருக்க மாட்டேன்” என்று கொதித்துப் போய் சொன்னாரே, அந்தக் கருத்துக்காவது செவி மடுத்திருக்கலாமே...?

எல்லா விதத்திலும் நம்மோடு போட்டி போடும் சீனா, எவ்வளவு அருமையாக- உலகமே வியந்து பாராட்டும் வகையில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்திக் காட்டினார்களே, அவர்கள் இப்போது நம்மைப் பார்த்து கைகொட்டி சிரிக்க மாட்டார்களா?

அரசியல் அசுத்தம் எதுவும் கலக்காத நேர்மையான மனிதர் என்று மக்களால் நம்பப்பட்ட மன்மோகன்சிங், எப்படியாவது பதவியில் ஒட்டிக்கொண்டு இருந்தால் போதும் என்று நினைக்கும் மூன்றாம்தர அரசியல்வாதியாக மாறிவிட்டதைப் பார்க்கும்போது, மிகவும் வருத்தமாக உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழலும், காமன்வெல்த் ஊழலும்- கையாலாகாத்தனமும் அவரை ஏழேழு ஜென்மத்துக்கும் துரத்துமே...! அதைப்பற்றியாவது அவர் கவலைப்படுவாரா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. நமக்கு அந்தக் கவலை நிச்சயம் இருக்கிறது.

“இந்தியாவுக்கு விடுதலை கொடுக்க ஏன் மறுக்கிறீர்கள்” என்று அப்போதைய இங்கிலாந்து பிரதமர் சர்ச்சிலிடம் கேட்டபோது, அவர் என்ன பதில் கூறினாராம் தெரியுமா? “அந்த முட்டாள்களுக்கு ஆட்சி நடத்தவெல்லாம் தெரியாது; அவர்களிடம் எப்படி இவ்வளவு அருமையான நாட்டை ஒப்படைப்பது?” என்று கேட்டாராம்...

இங்கிலாந்து பிரதமருக்கு அன்றே தெரிந்த உண்மை இந்திய ஏமாளிகளுக்குத் தெரிந்திருந்தால், மன்மோகன்களும், கல்மாடிகளும், எம்.எஸ்.கில்களும் அட்டை போல பதவிகளில் ஒட்டிக்கொண்டு இருக்க முடியுமா? “நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்து விட்டால்...”

Thursday, September 16, 2010

வாய்ச்சொல் வீரர்கள்

எல்லா கிராமங்களிலும் வெட்டி பேச்சு பேசுவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கும். ஏதாவது ஒரு திண்ணையில் கூடி உள்ளூர் முதல் உலக விவாகரம் வரை இங்கு காரசாரமாக விவாதிக்கப்படும். இந்த விவாதங்கள் எந்த முடிவுகளையும் எட்டுவதற்கு அல்ல... மாறாக, அன்றைய பொழுதைக் கழிக்கும் வழி இது!

இப்போதெல்லாம் அரசு கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டங்களும் திண்ணைப் பேச்சு பேசும் கூட்டங்களாகவே மாறி விட்டனவோ என்ற சந்தேகம் நம் மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம், சாதிவாரி கணக்கெடுப்பு பிரச்சினை ஆகட்டும் அல்லது கொந்தளித்துக் கொண்டிருக்கும் காஷ்மீர் பிரச்சினை ஆகட்டும்- இது சம்பந்தமாக கூட்டப்படும் அனைத்துக் கட்சி கூட்டங்கள் பெரும்பாலும் சம்பிரதாய கூட்டங்களாகவே மாறி விட்டன.

இயற்கை அழகு கொஞ்சும் காஷ்மீர் பள்ளத்தாக்கில், அன்றாடம் நடக்கும் கல்லெறி சம்பவங்களும், அதை தொடர்ந்து நடக்கும் துப்பாக்கி சூடு- உயிர்ப்பலி சம்பவங்களும் நாடு முழுவதும் ஒருவித கவலையைத் தோற்றுவித்துள்ளது. இதனால், தலைநகரில் நடந்த காஷ்மீர் பிரச்சினை குறித்த அனைத்துக்கட்சி கூட்டம் குறித்து நாடு முழுக்க ஒருவித எதிர்பார்ப்பு நிலவியது.

காங்கிரஸ், பாரதீய ஜனதா, கம்யுனிஸ்டுகள், காஷ்மீர் ஆளும் கட்சி- எதிர்க்கட்சி மற்றும் அனைத்து முக்கிய கட்சிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டன. அனைத்து பத்திரிகைகளிலும், செய்தி சேனல்களிலும் தொடர்ந்து இதுகுறித்த செய்திகளும், அலசல்களும், விவாதங்களும் முழுமையாக ஆக்ரமித்து இருந்தன.

இதன் காரணமாக காஷ்மீர் மக்களிடையே மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிலும் எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே சென்றது. ஏதாவது ஒரு சமரசத் தீர்வு எட்டப்பட்டு, அதன்மூலம் வன்முறை சம்பவங்கள் கொஞ்சமாவது குறையாதா என்ற ஏக்கத்தினாலும், எதிபார்ப்பினாலும் விளைந்த எதிர்பார்ப்பு அது. ஆனால், இதுபோன்ற நப்பாசை எல்லாம் உங்களுக்கு வரலாமா என்று எக்காளத்துடன் அரசியல்வாதிகள் சிரிப்பதாகத்தான் இந்தக் கூட்டமும் நடந்து முடிந்தது.

வழக்கம் போல, காஷ்மீரில் நடக்கும் உயிரிழப்புகள் குறித்து தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொண்ட பிரதமர் மன்மோகன்சிங், வன்முறையால் எந்தத் தீர்வையும் எட்ட முடியாது என்ற வழக்கமான பல்லவியை பாடினார். மாநிலமே பற்றி எரியும்போதும், வார இறுதி நாட்களை தனது குடும்பத்தாருடன் செலவிட டெல்லிக்கு வந்துவிடும் முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவால் இந்தக் கூட்டத்துக்கு வரமுடியவில்லை.

சாப்பிட்ட பிஸ்கட், குடித்த காபிக்கு வஞ்சகம் செய்யாமல் தங்கள் பங்குக்கு ஏதேதோ பேசினர், அனைத்துக்கட்சித் தலைவர்கள். கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு விடாமல் “எல்லாவற்றிற்கும் காரணம் ஓமர் தான்” என்று சாடினார், காஷ்மீர் எதிர்க்கட்சித் தலைவர் மெஹபூபா. யாராலும் தெளிவாக- தீர்க்கமாக ஒரு பாதையைக் காட்ட முடியவில்லை. கூட்ட முடிவில், அனைத்துக்கட்சி குழுவினரை காஷ்மீருக்கு நேரடியாக அனுப்பி நிலவரத்தை அறிந்து வர முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான அரசியல் தலைவர்கள் நீண்ட காலமாக அரசியலில் இருப்பவர்கள்தான். சுதந்திரம் பெற்றது முதல் காஷ்மீர் பிரச்சினையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்தவர்கள்தான். இப்போது ஆரம்பித்த பிரச்சினையின் பின்னணியும் என்ன என்று தெரியாதவர்கள் அல்ல. அப்படி இருந்தும் ஒரு குழு அமைத்து, அந்த குழு அங்கு சென்று நேரடியாக நிலவரத்தைக் கண்டு வரவேண்டும் என்று இவர்கள் தீர்மானம் செய்து இருப்பது மீண்டும் மீண்டும் மக்களை, குறிப்பாக காஷ்மீர் மக்களை ஏமாற்றும் செயலே அன்றி வேறு எதுவும் இல்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக, பிரச்சினை உக்கிரமாக இருக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு இந்தக் குழு செல்லாமல், சற்றே அமைதியுடன் இருக்கும் ஜம்மு பகுதிக்கு தான் செல்லப் போகிறதாம். இதைவிட கேலிக்கூத்தான விஷயம் வேறு இருக்க முடியாது.

உளவுத்துறையினரும், அரசு எந்திரங்களும், காஷ்மீர் கட்சித் தலைவர்களும், அறிஞர்களும் இந்தப் பிரச்சினை குறித்து தர முடியாத விஷயங்களையும், ஆலோசனைகளையும் இந்தக்குழு தந்து விடும் என்ற நம்பிக்கை காஷ்மீர் மக்களுக்கு எப்படி ஏற்படும்? ஏதாவது ஒரு சமரசத் திட்டம் அரசால் அளிக்கப்படும் என்று நப்பாசையுடன் காத்திருந்த மக்களுக்கு இதுபோன்ற முடிவுகள் ஏமாற்றத்தைத் தருவது மட்டுமின்றி, மேலும் மேலும் வன்முறை பாதைக்கு அவர்களைக் கொண்டு சென்று விடாதா?

எந்தப் பிரச்சினை என்றாலும் முடிவு எடுக்காமல் இழுத்தடிப்பதுதான் ராஜதந்திரம் என்ற ஏமாற்று வேலையை இன்னும் எத்தனை நாள்தான் அரசியல்வாதிகள் மேற்கொள்வார்கள்?

“நெஞ்சில் உரமும் இன்றி, நேர்மைத் திறனும் இன்றி வஞ்சகம் செய்து வாழும் இந்த வாய்ச்சொல் வீரர்கள்” திருத்தப்படுவார்களா?

Tuesday, September 14, 2010

யாரிடம் போய் முறையிடுவது?

சமீபத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய இரண்டு தீர்ப்புகள் பலரது புருவத்தை உயர்த்தியது. முதலாவது தீர்ப்பு, “விருப்பப்பட்டு கொடுக்கப்படும் வரதட்சணையைப் பெற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை” என்பதாகும். மற்றொன்று, “மணமகன்- மணமகள் சம்மதத்தோடு செய்யப்படும் மைனர் திருமணம் செல்லுபடியாகும்” என்று அளிக்கப்பட்ட தீர்ப்பு.

இந்திய சமூக அமைப்பில் “வரதட்சணைக் கொடுமை” என்பது எண்ணற்ற குடும்பங்களில் தினம் தினம் சூறாவளியை வீசிக்கொண்டேதான் இருக்கிறது... மாட்டை விலைபேசுவது போல மணமகளை விலைபேசும் அவலத்தை நீக்குவதற்கான போராட்டத்தில் ஓரளவுக்கு வெற்றி பெற்று இருக்கிறோம் என்று நம்பிக்கொண்டு இருந்தவேளையில், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு வரதட்சணைக் கொடுமை ஒழிப்பில் ஈடுபட்டிருக்கும் சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் பேரிடியாகத்தான் அமைந்திருக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு நெருங்கிய உறவினர் ஒருவர் தனது மகனின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க வந்திருந்தார். அவருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, “தனது மகனுக்கு 150 சவரன் நகை வரதட்சணையை பெண் வீட்டார் கொடுப்பதாக” குறிப்பிட்டார். “அவர்கள் கொடுக்கிறார்களா? அல்லது நீங்கள் வற்புறுத்தி வாங்குகிறீர்களா?” என்று நான் கேட்டேன்.

அதற்கு அவர் கூறிய பதில், நாம் இன்னும் எந்த மாதிரியான மாயையில் வாழ்கிறோம் என்பதை எனக்கு உணர்த்தியது. “எனது சகோதரர் மகனுக்கு 125 சவரன் நகை வரதட்சணையாக தந்தார்கள். அதை விட அதிகமாக வாங்கினால்தான் நமக்கு கவுரவமாக இருக்கும் என்று எனது மனைவி உறுதியாக கூறிவிட்டார். இதை பெண் வீட்டாரிடம் சொல்லியபோது, அவர்களும் ஒத்துக்கொண்டனர்” என்று வெகு இயல்பாக கூறினார்.

எவ்வளவோ துறைகளில் இந்தியா படுவேகமாக முன்னேறி விட்டது என்று நாம் நெஞ்சை நிமிர்த்திக் கொள்கிறோம். ஆனால், என்றென்றும் இணைந்து வாழப்போகும் இல்லற வாழ்க்கையில் வரதட்சணைக் கொடுமையை இன்னும் நாம் விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதும், அதற்கு வறட்டு கவுரவம் காரணமாக இருப்பதும், நாம் நாகரீக முகமூடி அணிந்த காட்டுமிராண்டிகள் தான் என்பதை எனக்கு மிகத் தெளிவாகவே உணர்த்தியது. அதிலும், வரதட்சணை பேரங்களுக்கு பின்னால் பெண்களே மிக முக்கிய பங்கு வகிப்பது, இந்த பிரச்சினையை ஒழிப்பதில் பெரிய தடைக்கல்லாக விளங்குகிறது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வேறு வரதட்சணை பிரச்சினைக்கு எதிரான போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் விதமாக அமைந்து விட்டதை மறுப்பதற்கில்லை.

மற்றொரு தீர்ப்பு மைனர் திருமணம் பற்றியது. ஒருகாலத்தில் இந்தியப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளில் மிக முக்கியமானது பாலிய விவாகமும், உடன்கட்டை ஏற்றுதலும்தான்! ராஜாராம் மோகன் ராய் போன்ற பெருந்தலைவர்களின் அயராத முயற்சியின் விளைவாக உடன்கட்டை கொடுமை ஒழிக்கப்பட்டு விட்டாலும், பாலிய விவாகம் மட்டும் முற்றிலும் ஒழிக்கப்படாமல் ஆங்காங்கே தலைநீட்டிக் கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, மணமக்களின் சம்மதத்தோடு நடைபெறும் பாலிய விவாகங்களை அங்கீகரிக்கலாம் என்கின்ற ரீதியில் அமைந்து விட்டது இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளைத் தோற்றுவித்து இருக்கிறது.

நாட்டின் பிற்பட்ட கிராமங்களில், வறுமை மற்றும் அறியாமை காரணமாகத்தான் இத்தகைய திருமணங்கள் இன்னும் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. பெண் குழந்தை என்பதே மிகப்பெரிய சுமை என்று கருதும் பிற்போக்குத்தனமான மக்களிடையே இவ்வித பழக்கம் அதிகமாக உள்ளது.

12, 13 வயதே நிரம்பிய நிலையில், உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் எந்தவித பக்குவத்தையும் எட்டாத சிறுமிகளிடையே மனப்பூர்வமான சம்மதத்தை பெறுவது என்பது எவ்வளவு பெரிய ஏமாற்றுவேலை என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான்! “மனப்பூர்வமான” என்கின்ற விஷயத்தில் எந்த அளவுகோலை இந்த தீர்ப்பில் பயன்படுத்தினார்கள் என்பதும் கேள்விக்குரிய விஷயம்தான்!

மொத்தத்தில் சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளையும், பிற்போக்கு கொடுமைகளையும் களைய வேண்டிய போராட்டத்தில், சட்டத்தின் உச்ச அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள்தான் மிக முக்கிய பங்கு வகிக்க வேண்டும். ஆனால், அவர்களே வேறுவிதமாக தீர்ப்பு அளிக்கும்போது, நம்மை நாமே நொந்து கொள்வதைத் தவிர வேறு என்ன வழி?

தங்கப்பதக்கம் திரைப்படத்தில் வருவது போல, “அந்த தெய்வமே கலங்கி நின்றால், யாரிடமே போய் முறையிடுவது?”

Friday, May 28, 2010

வாய்ச்சொல் வீரர்கள்!

சி.ஆர்.பி.எப். வீரர்கள் சுட்டுக்கொலை; தண்டவாளத்தில் நாசவேலை- ரெயில்கள் கவிழ்ப்பு- ஏராளமானோர் பலி; கண்ணிவெடி வைத்து வாகனங்கள் தகர்ப்பு; அதிகாரிகள் கடத்தல்;

ஆம்! நக்சலைட்டுகள் தாக்குதல்களின் விளைவுகள்தான் நாம் மேலே சொன்னவை! தினம்தினம் அனைத்து பத்திரிகைகளையும் ஆக்கிரமிக்கும் இந்த செய்திகளும், அவற்றைத் தொடர்ந்து, மத்திய- மாநில அமைச்சர்களின் அறிக்கைகளும், தினத்தந்தியின் சிந்துபாத் கதை போல முடிவில்லாமல், ஆனால் சுவாரசியம் குறையாமல் சென்று கொண்டே இருக்கின்றது!

இதற்கு முன்பு இருந்த உள்துறை அமைச்சர், தனது உடை அலங்காரத்தில் காட்டிய அக்கறையில் சிறுதுளி கூட, உள்நாட்டு பாதுகாப்பு குறித்த விஷயங்களில் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து பதவி இழக்க நேரிட்டது. நிதி அமைச்சகத்தில் திறம்பட செயலாற்றிய தமிழகத்தின் ப. சிதம்பரம் அவர்கள் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றதும், நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பும், நிம்மதி பெருமூச்சும் எழுந்தது.

அவரும் “ஒரு வருடத்திற்குள் நக்சலைட்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்” என்று அழுத்தம்திருத்தமாக அறிவித்தார். ஆனால், நடந்ததோ வேறு. தங்களுடைய தாக்குதல் வேகத்தை தீவிரப்படுத்தினர். பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு பலமடங்கு அதிகரித்தது.

நக்சலைட்டுகளை கட்டுப்படுத்தும் பொறுப்பு யார் என்பது குறித்து மத்திய- மாநில அரசுகள் சண்டை போட்டுக்கொண்டன. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதா? அல்லது ராணுவத்தீர்வா? படைபலத்தை உபயோகிப்பது என்றால் எந்த அளவுக்கு பயன்படுத்துவது? நக்சலைட்டுகளுக்கு உள்ளூர் மக்களான பழங்குடியினர் ஆதரவு எந்த அளவுக்கு உள்ளது? எதனால் இந்த ஆதரவு? இப்படி பல கோணங்களில் இருந்து எழும் கேள்விகளுக்கு, ஆள்பவர்களிடம் இருந்து எந்தவித பதிலோ, தீர்வுக்கான வழிமுறைகளோ இல்லை.

ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் குற்றம் சாற்றிக் கொள்வதை பார்க்கும்போது, ஆள்வோரின் திறன் குறித்த சந்தேகங்களும், வருத்தங்களும் எழுவதை நிச்சயம் தவிர்க்க முடியாது. நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் மிக முக்கியமான பிரச்சினையில் தீர்வு காண முயலாமல்- முடியாமல் ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்கள் வறட்டு வாதம் மட்டுமே புரிந்து கொண்டிருப்பது அவமானமான விஷயம் மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட!

பாதுகாப்பு அமைச்சக பொறுப்பில் இருப்பவர்கள், தொலைநோக்கு திட்டங்களை தீட்டி, உறுதியுடன் செயல்படுத்தி, மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு வழிகாண வேண்டியவர்கள்! சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றிய இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் அவர்களை இதற்கு சிறந்த உதாரணமாக கூறலாம்.

ஆனால், திறம்பட செயலாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட உள்துறை அமைச்சர் இந்தப் பிரச்சினையில் செய்வதறியாது திகைத்து நிற்கும் நிலை வந்ததின் காரணம் என்ன? ஒட்டுமொத்த அரசின் தெளிவற்ற கொள்கைகளா? அல்லது, தெளிவான திட்டங்களை செயல்படுத்த வேண்டிய உறுதி இல்லாததாலா? இல்லை, ஓட்டு அரசியல் குறுக்கிடுகிறதா? ஜனத்தொகை அதிகம் உள்ள நாடுதானே, சில உயிர்கள் போனால்தான் என்ன என்று நினைப்பார்களோ?

காரணம் எதுவாக இருந்தாலும், உயிரிழப்புகளை தினந்தோறும் சந்தித்துக் கொண்டிருப்பது அப்பாவி பொதுமக்கள்தானே? நாட்டு குடிமக்களின் அடிப்படை உரிமைகளான உணவு, இருப்பிடம், கல்வி ஆகியவற்றை கொடுக்க வேண்டிய அரசுக்கு, மக்களின் பாதுகாப்பு என்பது தலையாயக் கடமை என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தவேண்டியது அவசியம்!

இன்றைய சீர்கெட்ட அரசியலில், வெற்று வாக்குறுதிகளும், வாய்ஜாலங்களும் சாதாரண மேடைப் பேச்சாளர்களுக்கு வேண்டுமானால் அவசியமான சங்கதியாக இருக்கலாம். ஆனால், நூறு கோடி மக்களைக் கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை ஆளும் பொறுப்பில் இருப்பவர்கள் செயல்திறன் மிக்கவர்களாக இருக்கவேண்டியது இந்த இக்கட்டான சூழலின் மிக முக்கியத் தேவையாகும்!

வாய்ச்சொல் வீரர்கள் மாறுவார்களா?

அழகிப் போட்டி எனும் கேலிக்கூத்து!

1994-ம் ஆண்டு உலக அழகிப் போட்டிகளில் சுஷ்மிதா சென்னும் ஐஸ்வர்யா ராயும் வெற்றிக்கொடி நாட்டிய பிறகு, அழகிப்போட்டிகள் பெரும்பாலான இந்திய இளம்பெண்களின் கனவு, இல்லை- இல்லை, லட்சியமாகவே ஆகிவிட்டன. மிஸ் யுனிவர்ஸ் முதல் மிஸ் உசிலம்பட்டி வரை அழகிப்போட்டிகள் நடக்காத இடங்களே இல்லை எனலாம்.

இந்தியாவிலேயே இந்த நிலை என்றால் அமெரிக்காவைப் பற்றி கேட்கவே வேண்டாம். அங்கேயே பிறந்து வளர்ந்த பெண்களாகட்டும், அல்லது பிற நாடுகளில் இருந்து குடியேறியவர்களாகட்டும், மிஸ் அமெரிக்கா பட்டம் சூடுவது அவர்களின் மிகப்பெரிய கனவு!

இந்த ஆண்டு அமெரிக்க அழகிப்போட்டியில் வெற்றி பெற்ற ரீமாவுக்கு ஒரு தனிச்சிறப்பு உள்ளது. ஆம், அமெரிக்க அழகிப்போட்டியில் வென்ற முதல் இஸ்லாமிய பெண் என்பதுதான் அது! லெபனான் நாட்டைச்சேர்ந்த ரீமா, மூன்று வயதிலேயே அமெரிக்காவுக்கு குடியேறி விட்டார்.

பொது இடங்களில் பெண்கள் ஆடை குறைப்பு செய்து, தங்கள் உடல் அழகை வெளிச்சம் போட்டுக் காட்டுவது இஸ்லாமிய கோட்பாடுகளின்படி தவறு- தடையும் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், தங்களது பெற்றோர்கள் அளித்த ஆதரவினாலும், ஊக்கத்தினாலும்தான் தன்னால் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற முடிந்தது என்கிறார், ரீமா!

லெபனான் பழமைவாதிகள் மத்தியில் ரீமா அழகிப்போட்டியில் கலந்து கொண்டதே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் இப்போது அடுத்த பிரச்சினை வெடித்துள்ளது.

2007-ம் ஆண்டு டெட்ராய்ட் நகரில், நிர்வாண நடனங்களுக்கு புகழ்பெற்ற ஒரு இரவு விடுதியில் “போல் டான்ஸ்” எனப்படும் அரை நிர்வாண ஆட்டம் போட்டதாக ரீமா மீது இப்போது குற்றச்சாட்டு வீசப்பட்டுள்ளது. உலக அழகிப்போட்டி விதிகளின்படி இது தவறு என்பதால், விசாரணை நடத்தப்படுகிறது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ரீமாவின் பட்டம் பறிக்கப்படும்.

அமெரிக்காவில் இது ஒன்றும் புதிதல்ல. கடந்த ஆண்டு வெற்றி பெற்ற பெண்ணும், செக்ஸ் வீடியோவில் தோன்றிய குற்றச்சாட்டினால் அழகிப் பட்டத்தை இழக்க நேரிட்டது.

ஆனால், பெண்ணுரிமை ஆர்வலர்கள் கருத்தோ வேறுவிதமாக உள்ளது. ஆணுக்குப் பெண் சரிநிகராக கருதப்படும் இந்தக்காலத்தில், பெண்களின் உடல் அழகை வெளிச்சமிட்டுக் காண்பிக்கும் இத்தகையப் போட்டிகள், அவர்களை வெறும் சதைப்பிண்டமாகவும் கவர்ச்சிப் பாவைகளாகவும் பார்க்கும் வக்கிர உணர்வைத்தான் காட்டுகிறதே ஒழிய, அழகுணர்ச்சி என்பதெல்லாம் போலி மேற்பூச்சு வாதம் என்று கடுமையாக சாடுகிறார்கள்.

அரைகுறை ஆடையுடன் நைட் கிளப்பில் ஆடியதை குற்றமாக பார்க்கும் போட்டி அமைப்பாளர்கள் செய்வது என்ன? போட்டியில் கலந்து கொள்ளும் அத்தனை பெண்களையும் டூ-பீஸ் நீச்சல் உடைகளுடன் ஒய்யார நடை போட வைத்து, அதை தொலைகாட்சிகள் மூலம் உலகம் முழுக்க காண்பித்து, மில்லியன் மில்லியனாக டாலர்களை குவிப்பதை என்னவென்று சொல்வது? அரை நிர்வாண ஆட்டம் தவறு என்றால் இது எந்தவகையில் சாரும்?

உலக அழகிப்போட்டி இறுதிச்சுற்றில் ஒரு கேள்வி கேட்கப்படும். இது அழகிகளின் அறிவை சோதிப்பதற்காகவாம்! ஒரே கேள்வியிலேயே எதிரில் இருப்பவர்களின் அறிவை தெரிந்து கொள்ள இவர்கள் என்ன அந்த படைப்பு கடவுள் பிரம்மாவா?

அதற்கு முன்பு வரை அந்தப் பெண்களின் அங்கங்களையும் அசைவுகளையும் முழுமையாக வெளிச்சம் போட்டு காட்டுவதற்காக, அனைத்து தகிடுதத்தங்களையும் செய்துவிட்டு, ஒரே ஒரு கேள்வி கேட்டு விட்டு, நாங்கள் அறிவையும் சோதிக்கிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வது கடைந்தெடுத்த பித்தலாட்டமே அன்றி வேறு என்ன?

மற்றவர்களை வெறும் ஆண்களாகவும் பெண்களாகவும் மட்டுமே பார்த்து, Ladies and Gentlemen என்றே அழைத்துக் கொண்டிருந்த இதே அமரிக்க தேசத்தில், சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஞானஒளியை பரப்பச் சென்ற விவேகானந்தர், தனது புகழ்பெற்ற சிகாகோ உரையின்போது, Brothers and Sisters என்று பேச்சைத் துவக்கியத்தின் மூலம், மிகப்பெரிய உண்மையை அந்த தேசத்தை உணரச் செய்தார். ஆம்! பெண்ணை சகோதரியாகவும் பார்க்கலாம் என்ற உணர்வை ஒரே சொல்லின் மூலம் உணர்த்திய உணர்வுபூர்வமான உரை அது!

“மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என முழக்கமிட்ட முண்டாசுக்கவிஞன் இன்று உயிரோடிருந்து, “இழிவுகளுக்கு இணங்கிப் போகும் இளம் பெண்களைக்” காண நேர்ந்திருந்தால் என்னவாகி இருப்பானோ?

Tuesday, May 18, 2010

இங்கிலாந்து ஜனநாயகம் எங்கே போகிறது?

நமது ஆட்சி முறை, அரசியல் அமைப்பு சட்டம், நீதித்துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் பெரும்பாலும் இங்கிலாந்து நாட்டின் தழுவலாகவே உள்ளது நாம் அறிந்ததே! நூறு ஆண்டுகளுக்கு மேலாக அவர்களிடம் நாம் அடிமைப்பட்டிருந்ததன் விளைவு இது!

கடந்த அறுபது ஆண்டு காலத்தில் பாராளுமன்ற- சட்டமன்ற ஆட்சி முறைகளில் எண்ணற்ற மாற்றங்கள் வந்து விட்டது. அதில் குறிப்பிடத்தக்கது, பல்வேறு கட்சிகள் சேர்ந்து அமைக்கும் கூட்டணி ஆட்சி முறை! அடிப்படை கொள்கையிலேயே முரண்படும் கட்சிகள் கூட, அதிகாரம் ஒன்றை மட்டுமே பொது குறிக்கோளாகக் கொண்டு அமையும் இத்தகைய சந்தர்ப்பவாத கூட்டணி ஆட்சி முறையில், முதலில் பலி கொடுக்கப்படுவது நேர்மையும், தார்மீக சித்தாந்தங்களும்தான்! மத்தியிலும், பல்வேறு மாநிலங்களிலும் இதுதான் இன்றைய நிதர்சனம்!

மத்தியில் கூட்டணி ஆட்சி முறை வழக்கத்துக்கு வந்த பின்னர், மாநில கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகின்ற நிர்ப்பந்தத்தின் காரணமாக- அந்தந்த மாநிலத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் நிலையினை, கூட்டணி ஆட்சியை ஆதரிப்பவர்கள் சுட்டிக்காட்டுவது உண்டு! ஆனாலும், மாநில கட்சிகளின் ஆதிக்கம் மையத்தில் வலுப்பெறும் பட்சத்தில் ஊழல் அதிகரித்து இருப்பதுதான் யதார்த்தத்தில் நாம் அனுபவிக்கும் உண்மை!

சமீபத்தில், பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக வெட்டுத் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, ஆளும்கட்சியினர் தங்களுக்கான ஆதரவை பெரும் முயற்சியில், சில மாநிலக்கட்சித் தலைவர்களின் ஊழல் விவகாரங்கள் பெருமளவில் சமரசம் செய்து கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. ஜனநாயக ஆட்சி முறையின் மோசமான விளைவு இது என்பதை அறிவார்ந்த பெருமக்கள் அனைவரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

கூட்டணி ஆட்சி முறை இவ்வாறாக மிகவும் அபாயகரமான பாதையில் பயணித்துக் கொண்டிருந்தாலும், இதற்கான தீர்வு குறித்து யாருக்குமே ஒரு தெளிவில்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய உண்மை.

சரி, ஆரம்பத்தில் ஏன் இங்கிலாந்து பற்றி குறிப்பிட்டோம் எனத் தோன்றுகிறதா? நமது ஜனநாயகம் பயணிக்கும் அதே மோசமான பாதையில், இங்கிலாந்தும் பயணிக்க ஆரம்பித்து விட்டதின் அறிகுறி தெரிய ஆரம்பித்து விட்டது. ஆம்! மும்முனை போட்டி நிலவிய இங்கிலாந்து தேர்தலில், ஆளும் கட்சி தோல்வியைத் தழுவிய போதும், எந்த கட்சிக்கும் தனிப்பெரும் ஆதரவு கிட்டவில்லை. இதைத் தொடர்ந்து, 13 ஆண்டுகளாக எதிர் வரிசையில் அமர்ந்திருந்த பழமைவாதிகள் கட்சி, சுதந்திர ஜனநாயக கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்து உள்ளது.

இங்கிலாந்து வரலாற்றிலேயே கூட்டணி ஆட்சி ஏற்படுவது இதுதான் முதல் முறை! இது சாதனையா அல்லது வேதனையா? என்பது போக போகத்தான் தெரியும். நமது நாட்டில் உள்ளது போலவே, இந்த கட்சிகளுக்கு இடையேயும் அடிப்படையிலேயே கொள்கை வித்தியாசம் பெருமளவில் உள்ளது. இங்குள்ள அரசியல் பேரங்களைப் போலவே, அங்கும் அரங்கேறியது. கூட்டணி கட்சித் தலைவருக்கு துணை பிரதமர் பதவி வழங்கப்பட்டு, ஆட்சி அமைக்கப்பட்டது.

நல்லவற்றை யார் சொன்னாலும், எங்கு கண்டாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது அறிவுடையோர் வாக்கு. ஆனால், அதிகாரத்தைக்’ கைப்பற்றும் வழிமுறை எப்படிப்பட்டதாக இருந்தாலும், எந்த நாடு கடைப்பிடித்து வந்தாலும், அதை அப்படியேத் தழுவி, பதவியில் அமர்ந்து விடுவதுதான் அரசியல்வாதிகளின் குறிக்கோள் என்பது இங்கிலாந்தில் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி ஆட்சி என்பது ஐரோப்பாவுக்கு புதிதில்லை என்றாலும், உயர்ந்தபட்ச அரசியல் நெறிமுறைகளைப் பின்பற்றும் வழக்கம் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இன்றைக்கும் நிலவுகின்றது. இந்நிலையில், பதவிக்கான பேரங்களுடன் இங்கிலாந்து ஜனநாயகம் துவங்கி இருக்கும் இந்த புதிய பாதை, ஐரோப்பிய அரசியல் ஆர்வலர்களிடம் சற்று கவலையை விதைத்து இருப்பதை மறுக்க முடியாது!

இங்கிலாந்து ஜனநாயகத்தையாவது இறைவன் காப்பாற்றுவானாக!

Tuesday, May 4, 2010

நெஞ்சு பொறுக்குதில்லையே...!

கசாப்! – நூறு கோடி இந்தியர்கள் மனதிலும் வெறுப்பின்- கோபத்தின்- ஆற்றாமையின்- அவமானத்தின் சின்னமாய் ஒன்றரை ஆண்டுகளாக, நெருஞ்சி முள்ளாக உறுத்திக் கொண்டிருந்தவன். பட்டப்பகலில் ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, “கொலை எனக்கு தொழில்” என்பது போன்று, அப்பாவி மக்களை கண்ணை மூடிக் கொண்டு சுட்டுத் தள்ளியவர்களில், உயிரோடு பிடிபட்ட ஒரு பாவி!

டி.வி. சேனல்களில் வரும் ரியாலிட்டி ஷோக்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில், கேமரா கண்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தங்களது கொலைத்தொழிலை அரங்கேற்றிய இந்த கயவன், “தப்பு செய்தான்” என்று நிரூபிப்பதற்கே நமது சட்டத்திற்கு ஒன்றரை வருடம் ஆகியுள்ளது. அதிலும், உடந்தையாக இருந்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட இரண்டு இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்- சாட்சிகள் போதவில்லையாம்!

நமது நீதித்துறை நேர்மையாக நடப்பதற்கு இதுவே சாட்சி என உள்துறை அமைச்சரும் பெருமிதப்படுகிறார். இவ்வளவு பெரிய மாபாதக செயலை செய்தவர்களை குற்றத்தைக் கூட நிரூபிக்கத் திராணி இல்லாத விசாரணை அதிகாரிகளை கண்டிப்பதை விட்டுவிட்டு, பெருமிதப்படும் போக்கை என்னவென்று சொல்ல...?

இந்தியாவை மட்டுமல்ல, உலகத்தையே பதைபதைக்க வைத்த நேரடி தீவிரவாத செயலை செய்தவர்களை தண்டிக்கவே நமக்கு சாட்சிகள் போதவில்லையே... இந்த லட்சணத்தில் உள்நாட்டில் மறைமுக தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று எப்படி நம்புவது?

ஆம்- கேதான் தேசாய் நினைவிருக்கிறதா? ஒழுக்கத்திற்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக, எளிமையின் சின்னமாக வாழ்ந்த மொரார்ஜி தேசாய் வாழ்ந்த இந்த புண்ணிய தேசத்தில்தான் கேதான் தேசாய் போன்ற பணப்பேய்களும் வாழுகின்றன! ஆயிரம் ரூபாய் நோட்டை முழுதாக கண்ணால் கண்டிராத மக்களை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் நமது நாட்டில், 1800 கோடி ரூபாய் பணத்தை ரொக்கமாக வீட்டில் வைத்திருந்த மாமனிதர்தான் இந்த கேதான் தேசாய்!

எவ்வளவு ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் சேர்ந்தால் 1800 கோடி ரூபாய் வரும் என்பதை கணக்கிட ராமானுஜர் கூட சற்று திணறித்தான் போவார்! ஆனால், இந்த பணப்பேய் திணறாமல், சிதறாமல் இவ்வளவு பணத்தையும் தனது வீட்டில் ஒளித்து வைத்து, பார்த்து பார்த்து ஆனந்தப்பட்டுக் கொண்டு இருந்திருக்கிறது!

வாழும் கடவுள்களாக மக்கள் கருதும் டாக்டர்களை உருவாக்கும் கல்லூரிகளை அனுமதிப்பதில் செய்த ஊழல் மூலம் சம்பாதித்த- அல்ல, அல்ல, கொள்ளை அடித்ததின் மூலமாக கிடைத்த பணம்தான் இது! இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது இந்த பணம் மட்டுமல்ல, டன் டன்னாக தங்கக் கட்டிக்களும்தான்! இவற்றின் மொத்த மதிப்பைக் கணக்கிட்டால், ஒரிசா போன்ற மாநிலங்களின் ஒரு வருட பட்ஜெட்திற்கு நிகராக வருகிறது!

இவ்வளவு பணத்தை லஞ்சமாக கொட்டிக் கொடுக்கும் மருத்துவக் கல்லூரிகள், எந்த மாதிரியான டாக்டர்களை உருவாக்குவார்கள்? அவர்களால் எத்தனை லட்ச மக்களின் உயிருக்கு அபாயம் உள்ளது? எத்தனை கோடி மக்கள் நிரந்தர ஊனமாகக் கூடிய பேரபாயம் உள்ளது? இது ஒருவகையான தீவிரவாதம் இல்லையா? இவர்கள் தீவிரவாதிகளுக்கு இணையான தண்டனை கொடுக்கப்பட வேண்டியவர்கள் அல்லவா?

அரசியல்வாதிகளின் ஆதரவு இல்லாத ஒரு கசாப்புக்கு தண்டனை கொடுக்கவே இவ்வளவு அவகாசமும் சாட்சிகளும் தேவைப்படுகின்றனவே, எல்லா ஆதரவுகளும் பணபலமும் இருக்கும் வாய்ப்புள்ள கேதான் தேசாய் குற்றம் நிரூபிக்கப்படுமா? அல்லது இதற்கும் சாட்சிகள் இல்லாமல், இந்தப் பணம் முழுவதும் அவரது சேவையைப் பாராட்டி வழங்கப்பட்ட பரிசுகள் என்று கூட சொல்லுவார்கள்!

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்....!

Wednesday, April 28, 2010

அந்தஸ்து தீண்டாமை

மே ஒன்று- தொழிலாளர் தினம்! ஆதிக்கவெறி அடக்கி, அன்புநெறி செலுத்தி, உதிரத்தை வியர்வையாக்கி உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை பெற்ற நாளாக கொண்டாடப்படும் நாள்! 1886-ம் ஆண்டு இதே நாளில்தான் எட்டு மணி நேர வேலையை வலியுறுத்தி சிகாகோ நகரில் நடந்த போராட்டத்தில், தங்களது இன்னுயிரையும் ரத்தத்தையும் தொழிலாளர்கள் தியாகம் செய்த நாள்! தொழிலாளர்கள் என்றாலே, அதிகாலை முதல் அந்தி சாயும் வரை அடிமை போல உழைக்க வேண்டும் என்ற எழுதப்படாத சாசனத்தை மாற்றக் காரணமாக இருந்த நாள்!

கியூபாவில் சுமார் அறுபது ஆண்டு காலமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடு வரும் பிடல் காஸ்ட்ரோ, மே தினம் அன்று நடத்தும் பிரம்மாண்டமான ஊர்வலமும், அவரது பேச்சும் உலகம் முழுக்க உள்ள தொழிலார் வர்க்கத்தின் ரத்த நாளங்களை முறுக்கேற்றி வந்திருக்கின்றன.

ஆனால், உலக முன்னேற்றத்தின் சிற்பிகளாக விளங்கிக் கொண்டிருக்கும் உழைப்பாளிகளின் உன்னதத்தை போற்றிக் கொண்டாட வேண்டிய மே தினம் இன்று எப்படி அனுசரிக்கப்படுகிறது? உலக அளவில் எப்படியோ, ஆனால் இந்தியாவைப் பொருத்தவரையில் இந்த நாள் மற்றுமொரு விடுமுறை நாளாகவும், “உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக” படம் பார்க்கும் நாளாகவும்தான் பார்க்கப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

ஏன் இந்த நிலை? நமது நாட்டில் எழுபது சதவீதமாக இருக்கும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், அதிகார வர்க்கத்தையும் அதை அண்டி வாழும் கூட்டத்தை மட்டுமே சமூகமாக பார்க்கும் மனநிலைக்கு ஏன் மாறினோம்?

சமூகத்தில் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், அனைத்து மட்டத்திலும் அன்றாடம் உழைத்துக் கொண்டிருக்கும் மக்களின் பங்களிப்பு இல்லாமல் எந்த இயக்கமும் நடைபெறாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. துப்புரவு தொழிலாளி தொடங்கி, அரசுத் துறையாகட்டும், அமைப்பு சாரா தொழிலாளிகளாகட்டும், ஏதோ ஒருவகையில் நம்முடைய அன்றாட வாழ்க்கை நிம்மதியாக நடைபெற நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனாலும், கம்ப்யூட்டர் சாப்ட்வேர், தொலைத்தொடர்புத்துறை மற்றும் சில துறைகளில் கடந்த 15 ஆண்டுகளாக இந்தியா எட்டிய அதீத வளர்ச்சியும், அதைத் தொடர்ந்து கிட்டிய வேலைவாய்ப்புகளும்- வசதிகளும், நமது எண்ணங்களிலும், மற்ற மனிதர்கள் குறித்த நமது மதிப்பீடுகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டன. ஜாதி குறித்த தீண்டாமை விலகி, அந்தஸ்து தீண்டாமை நம்மை முழுவதுமாக ஆக்ரமித்து விட்டது.

நுனி நாக்கு ஆங்கிலமும், கும்மிருட்டில் கையில் மதுக்கிண்ணங்களும், அருகில் சுழன்றாடும் இளம்பெண்களும் தான் வாழ்க்கை; அந்த வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்கள் மட்டுமே மனிதர்கள்; மற்ற அனைவரும் நாகரீகம் தெரியாதவர்கள்... குறிப்பாக, உழைக்கும் வர்க்கமும்- விவசாயிகளும் தீண்டத்தகாதவர்கள் என்ற எண்ணம் வளர்ந்து கொண்டே போகிறது.

அதன் விளைவுதான் மே தினமாகட்டும், மற்ற எந்த முக்கிய நாட்களாகட்டும், நம்மைப் பொருத்தவரையில் வெறும் விடுமுறை நாட்களாகி விட்டன. ஒரு நாட்டின் இதயம் போன்றவர்கள் விவசாயிகளும், தொழிலாளர்களும் தான்! இதயத்தை ஒதுக்கி வைத்து விட்டு எந்த இயக்கமும் இருக்க முடியாது.

இந்த மே தினத்திலாவது, உழைப்பின் மேன்மையை ஒருகணமேனும் போற்றிவிட்டு, அந்தஸ்து தீண்டாமை நம்மை விட்டு விலக முயற்சி செய்ய சூளுரைத்து, மேதின மேன்மையை உலகோர் உணரச் செய்ய உறுதி கொள்வோமா?

Monday, April 19, 2010

என்று தணியும் இந்த கொள்ளை மோகம்?

ஏறத்தாழ 2400 ஆண்டுகளுக்கு முன்னர், தன்னுடைய மகனோடு அரண்மனையின் மிக உயர்ந்த பகுதியில் நின்று கொண்டு, கண்களில் அளப்பறியா ஆர்வம் கொப்பளிக்க பேசிக்கொண்டு இருந்தார். “மகனே, அதோ கிழக்கே வெகு தொலைவில் எனது கனவு தேசமான இந்தியா உள்ளது! வற்றாத ஜீவநதிகளும், கற்பனையிலும் எண்ணமுடியாத இயற்கை வளங்களும், வைர- வைடூரிய- ரத்தின குவியல்களும் குவிந்துள்ள நாடு அது! எல்லாவற்றிற்கும் மேலாக, ஹோமரின் அற்புத படைப்புகளான லியத், ஒடிஸ்ஸி ஆகியவற்றை விஞ்சும் வகையில் ராமாயணம், மகாபாரதம் போன்ற எண்ணற்ற காவியங்களும், தத்துவக் குவியல்களும் நிறைந்துள்ள நாடு இந்தியா. அந்த நாட்டை வென்று உனது ஆட்சியின் கீழ் கொண்டு வருவதைத்தான் உன் வாழ்க்கையின் லட்சியமாகக் கொள்ளவேண்டும்” என உணர்ச்சி பொங்க உரைத்த அந்த மன்னன் பிலிப்; ஆர்வத்துடனும் உன்னிப்பாகவும் கவனித்துக் கொண்டிருந்த மகன்தான் உலகையே தனது கோடிக்கு கீழே கொண்டு வரத் துடித்த மாவீரன் அலெக்சாண்டர்!

2400 ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவின் அளவற்ற வளங்கள் உலகத்தின் கண்களை வெகுவாக உறுத்தியது என்றால், பணத்தின் மீது வெறி கொண்டு அலையும் நவீன காலத்து மனிதர்களைப் பற்றி சொல்லவேத் தேவையில்லை.

கர்நாடகத்தின் வடக்குப் பகுதியில்- ஆந்திர எல்லையில் இந்தியாவின் கனிம வளத்திற்கு சான்றாக விளங்குவதுதான் பெல்லாரி மற்றும் சுற்றுப்பகுதிகள். தங்கள் காலடிக்கு கீழே குவிந்து கிடக்கும் செல்வம் பற்றி அறியாது, வறுமையில் உழன்று கொண்டிருந்தனர், அந்தப் பகுதி மக்கள். விடுவார்களா அரசியல்வாதிகள்?

தற்போது கர்நாடக அரசியலையே தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் அந்த மந்திரி சகோதரர்கள், சுரங்கம் தோண்டும் உரிமையைப் பெற்று, இயற்கை வளம் முழுவதையும் எந்தவித கட்டுப்பாடும் இன்றி சூறையாடிக் கொண்டிருக்கின்றனர். தடுக்க வேண்டிய அரசாங்கத்தின் அனைத்துப் பிரிவினரின் கைகளையும் கரன்சி கத்தைகளால் கட்டிப்போட்டுள்ளனர், சகோதரர்கள்!

அவர்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் குறைந்தபட்சம் 100 கோடி டன் இரும்புத்தாது இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு டன் இரும்புத்தாது ஏற்றுமதி செய்தால் கிடைக்கும் வருமானம் 7,000 ரூபாய். அதை வெட்டி எடுக்க ஆகும் செலவு வெறும் 350 ரூபாய். ஆக, ஒரு டன்னுக்கு மட்டும் கிடைக்கும் லாபம் சுமார் 6600 ரூபாய்.

இதில் அரசாங்கத்துக்கு கொடுக்கப்படும் தொகை எவ்வளவு தெரியுமா? மயங்கி விடாதீர்கள்... வெறும் 27 ரூபாய்! இதுவரை சுரண்டி எடுக்கப்பட்டது மட்டும் 30 கோடி டன் இரும்புத்தாது! அப்படியானால், அந்த சகோதரர்கள் இதுவரை சூறையாடிய இயற்கை வளங்களின் மதிப்பை கணக்குப் போட்டு பார்க்க கால்குலேட்டரில் இருக்கும் பூஜ்யங்கள் போதாது!

அரசாங்க விதிகளை மீறுவது- காடுகளை சகட்டுமேனிக்கு அழிப்பது மட்டுமல்லாமல், இரு மாநில எல்லைகளையே தங்கள் இஷ்டத்திற்கு இவர்கள் மாற்றி அமைத்துள்ளதும் தெரியவந்துள்ளது! இவ்வளவுக்கும் இரண்டு மாநிலங்களை ஆள்வதும் எதிரெதிர் தேசியக் கட்சிகள்!

பணம் என்றால் பிணம் கூட வாயைத் திறக்கும் என்பார்கள்! இந்த அரசியல்வாதிகள் எம்மாத்திரம்? மாவீரன் அலெக்ஸாண்டரின் தந்தையாவது இந்தியாவின் வளத்தை தங்களது நாட்டு மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்றுதான் எண்ணினான்... ஆனால் நம்மவர்களோ, இவ்வளவு பணத்தைக் கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்று கூடத் தெரியாமல், பணவெறிக்கு இரையாகிக் கிடக்கிறார்களே?

மாவோயிஸ்ட்களின் பிரச்சினைக்கு மூல காரணமாக சொல்லப்படுவதே, பழங்குடியினர் பகுதிகளில் இயற்கை வளங்கள் கொள்ளை அடிக்கப்படுவதுதான்! அதிலும், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நக்சலைட்டுகள் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் நமது நாட்டில் இன்னமும் இதுபோன்ற இயற்கைவளக் கொள்ளையை அனுமதிக்கலாமா?

கவனிக்குமா, மத்திய அரசு?

Saturday, April 17, 2010

கட்டாயக்கல்வி – சாத்தியமா?

வணக்கம்! போலி சாமியார்- போலி மருந்துகள்- திருமணத்துக்கு முன்பே உறவு என கடந்த சில வார செய்திகளில் ஆக்கிரமித்து இருந்த விஷயங்கள் எதுவுமே ஆரோக்கியமானதாக இல்லை என்றாலும், மத்திய அரசின் “புதிய கல்வி கொள்கை” நம்பிக்கை ரேகையை பரவ விட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட “கல்வி கற்பது அடிப்படை உரிமை” திட்டம் ஏறக்குறைய 130 நாடுகளில்- நம்மை விட பல வகையில் பின்தங்கிய நாடுகளில் கூட- செயல்படுத்தப்பட்டு வருகிறது. நமது நாட்டிலும், “கல்வி அடிப்படை உரிமை” என சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவச கல்வி சட்டமாக்கபட்டுள்ளது.

எந்த காலக்கட்டத்திலும், மனித சமூகத்தின் ஆதாரமாக திகழ்வது கல்வி அறிவுதான். இதை முழுமையாக உணர்ந்திருந்த “படிக்காத மேதை” காமராஜர், எல்லா குழந்தைகளுக்கும் கல்விக்கண் திறப்பதையே தன் வாழ்வின் மிகப்பெரிய லட்சியமாகக் கொண்டிருந்தார். ஆரம்பக்கல்வி படிக்கும் குழந்தைகளால் எவ்வளவு தொலைவு நடக்க முடியுமோ, அதை கருத்தில் கொண்டு ஆரம்பப்பள்ளிகளையும், உயர்நிலைப் பள்ளி மாணவர்களால் பயணிக்க இயலும் தூரத்தை கணக்கில் கொண்டு உயர்நிலைப் பள்ளிகளையும் துவக்க உத்தரவிட்டவர், கர்ம வீரர்! அது மட்டுமல்ல, வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் குழந்தைகளுக்கு மத்திய உணவு அளிப்பதன் மூலம், அவர்களை பள்ளிக்கு வரவழைத்த தீர்க்கதரிசி அவர்!

படிப்பறிவு இல்லாத அந்த மேதைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய சிந்தனை இப்போதாவது நமக்கு வயப்பட்டதே! ஆனாலும், 50 ஆண்டுகளுக்கு முன்பு நமது அரசாங்கமும் அதிகாரிகளும் கொண்டிருந்த நேர்மையும் செயல்திறனும், எந்த ஒரு திட்டத்தையும் சிறப்பாக செயல்படுத்த அடிப்படை காரணமாக அமைந்திருந்தது. இன்று அதை எதிர்பார்க்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான்!

இந்தியாவில் ஆறு முதல் பதினான்கு வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 22 கோடி என்றும், அதில் சுமார் 92 லட்சம் பேர் அடிப்படை கல்வியறிவு அற்றவர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இவர்கள் பள்ளிக்கு செல்லாததன் மிகப் பெரிய காரணமே, வறுமை தான்! இளம் வயதிலேயே ஹோட்டல்கள், மெக்கானிக் கடைகள் போன்றவற்றில் வேலை செய்து, தங்களால் இயன்ற அளவுக்கு, குடும்ப வறுமையை போக்குவதில் பங்காற்றுகிறார்கள். இளமையில் வறுமை மிகப் பெரிய கொடுமை என்பதும், நமது நாட்டில் சுமார் 30 சதவீதம் பேர் அதை அனுபவிப்பவர்கள் என்பதும் நாம் அறிந்ததே!

இவர்களின் கல்வியும்- குடும்பத்தின் ஏழ்மை சூழ்நிலையும் ஒன்றோடு ஒன்று பிண்ணி பிணைந்தவை. இதை ஒட்டுமொத்த சமூக பிரச்சினையாக அணுகினால் மட்டுமே, இந்தத் திட்டத்தின் உயரிய நோக்கம் நிறைவேறும் பாதையில் நம்மால் பயணிக்க முடியும். முதல் அடி எடுத்து வைப்பதன் மூலமே எந்த நீண்ட பயணத்தையும் தொடங்க முடியும் என்ற வகையில், அடிப்படை கல்வி உரிமை சட்டத்தை வரவேற்று, நம்மால் இயன்ற பங்களிப்பை செய்வோம்!

இலக்கிய போர்வையில் ஆபாசம்!

சமீபத்தில் பெண் எழுத்தாளர் ஒருவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது... "இணையதளத்தில் வெளியாகும் அவரது எழுத்துக்களில் ஆபாசம் மேலோங்கி இருக்கிறது" என்பதுதான் அந்த புகார்...!

வழக்கம் போலவே எழுத்தாளருக்கு ஆதரவான- எதிர்ப்பான கருத்துக்கள் பல்வேறு தரப்பிலும் கிளம்பி விட்டன. "எழுத்துக்கும் பேச்சுக்கும் தடை போட இது ஒன்றும் பழமைவாதிகளால் ஆளப்படும் நாடு அல்ல" என்று ஒரு சாராரும், "சுய ஆதாயத்துக்காக ஆபாசமாக எழுதப்படுவது கண்டிக்கப்பட வேண்டும்" என்று மறு சாராரும் வாதிடுகின்றனர்.

எந்த ஒரு கருத்துக்கும் இரு வகை பார்வை இருக்கத்தான் செய்யும். அவரவர் பார்வையில் அவரவர் கருத்துக்கள் நியாயமானவையே! என் மனத்திலும் இது குறித்து எழுந்த தர்க்கங்களை உங்கள் முன் சமர்ப்பிகின்றேன்...!

எந்த ஒரு நாகரீகமான சமுதாயத்திலும் குறிப்பிட்ட சில மனிதர்களுக்கு விசேஷமான மரியாதைகளும், அவர்களது கருத்துக்களுக்கு முன்னுரிமையும் கிடைப்பது இயல்புதான்! அரசியல்வாதிகளுக்கு அவர்களது அதிகாரத்தின் மூலமாகவும், நடிகர்களுக்கு கவர்ச்சியினாலும், ஆன்மிகவாதிகளுக்கு- அவர்களது ஞானத்தின் காரணமாகவும், பெரிய மனிதர்களுக்கு பணத்தினாலும் இந்த முக்கியத்துவங்கள் கிடைக்கின்றன.

இவர்களை தவிர, சமுதாயத்தினால் எப்போதுமே ஊன்றி கவனிக்கப்படுபவர்கள் இலக்கியவாதிகள்! இவர்களது படிப்பறிவும்- வித்தியாசமான சிந்தனைகளும், மொழியின் மீதான காதலும் இவர்களுக்கு எப்போதுமே ஒரு சிறப்பான இடத்தை சமூகத்தில் பெற்று தருவதுடன், இவர்களது சிந்தனைகளும் கருத்துக்களும் சமுதாயத்தில் பெரிய தாக்கத்தை உண்டாக்கக் கூடியவை என்பதை யாரும் மறுக்க முடியாது! இதனாலேயே பொறுப்புணர்வும் இவர்களுக்கு சற்று கூடுதலாக இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்ப்பது தவறா?

"சினிமாவில் காட்டாத ஆபாசத்தையா நாங்கள் எழுதி விட்டோம்?" என்று ஒரு தவறை இன்னொரு தவறுக்கு உதாரணப்படுத்துவது என்பது முரணாகத் தெரியவில்லையா? "ஆபாசத்தின் எல்லை எது என்பதை எப்படி வரையறுக்கிறீர்கள்?" என்று புத்திசாலிதனமாக கேட்பதன் மூலம், தங்களது பொறுப்பில் இருந்து நைசாக நழுவும் முயற்சிதானே இது!

குறிப்பிட்ட சில கருத்துக்களை வலியுறுத்த பயன்படும் முயற்சியில் உபயோகிக்கப்படும் வார்த்தைகள் நிச்சயமாக தவறாக எடுத்துக் கொள்ளப்படாது தான்! கமலின் மகாநதியில் உபயோகிக்கப்படும் "விலைமகள் மகன்" வார்த்தையும் இந்த வகையானது தான்! இந்த அளவுகோலை எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடியுமா? ஏன், இவர்களது வீட்டில் பயன்படுத்துவார்களா?

"100 ஆசை நாயகர்களை வைத்துக் கொள்வேன்" என்பதும், "இருபாலுமை என்பது எனது பிறப்புரிமை" என வறட்டு வாதம் புரிவதும், சமூகம் உருப்பட எந்த வகையில் உதவும் என்பதும் நமது சிற்றறிவுக்கு புரியவில்லை. இவர்களின் ஆபாச எழுத்துக்கு எதிர்ப்பு கிளம்பும்போது எல்லாம் "பெண்ணிய படைப்பாளிகளை முடக்கும் முயற்சி" என்ற உளுத்துப் போன வாதத்தின் அடியில் ஒளிந்து கொள்ள முயல்வது ஏன்?

அடிமனது வக்கிரங்களும், காம உணர்ச்சியும் மனித குலத்தின் பலவீனம்தான்! அதை மட்டரகமான முறையில் பயன்படுத்தி பொருள் லாபம் ஈட்ட முனைவோர் மிருகத்திற்கு சமமானவர்கள் அன்றோ! இலக்கியவாதிகள் என்பவர்கள்- சமுதாயத்தின் பலவீனங்களை களைந்து, மென்மேலும் முன்னேற ராஜபாட்டை அமைக்க வேண்டியவர்கள் அல்லவா?

எப்பேர்பட்ட வேதனைகளையும்- வலிகளையும், காதலையும்- காமத்தையும், வீரத்தையும்- விவேகத்தையும் அழகாக சொல்ல அன்னை தமிழில் வார்த்தைகள் இல்லையா? இல்லை, இவர்களது வார்த்தை வளம்தான் குன்றி விட்டதா? எழுத்து சுதந்திரம் என்பது என்ன? எதை வேண்டுமானாலும் எழுதுவதா? அல்லது முற்போக்கு சிந்தனைகளை- யாருக்கும் அஞ்சாமல் வலிமையான வார்த்தைகள் மூலம் விதைப்பதா?

எதையுமே தவறில்லை என்று வாதிட்டு- மற்றவர்களை மட்டுமின்றி, தங்களை தாங்களே ஏமாற்றி கொள்பவர்களாகத்தான் இவர்கள் தென்படுகிறார்களே தவிர, உண்மையான இலக்கியவாதிகளாக அல்ல!

இப்படி வருடத்திற்கு ஒருமுறை ஏதாவது ஒரு சர்ச்சையில், இவர்கள் வலுவில் சென்று சிக்கிக் கொள்வதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? மலிவான விளம்பர உத்திகளை நம்பி மட்டுமே பொருளையும் புகழையும் அடைந்து விடலாம் என்ற தவறான எண்ணத்தை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?