விதுர நீதி!

புராண காலம் தொடங்கி, இன்றைய நவீன காலம் வரை எவ்வளவோ அமைச்சர்கள் தங்கள் மதிநுட்பத்தை பல்வேறு விதமாக, பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால், திருதராஷ்டிரன் அமைச்சரவையை அலங்கரித்த விதுரன் போன்ற மதிநுட்பமும், நேர்மையும், யாருக்கும் அஞ்சாமல் நல்லவற்றை எடுத்துரைத்தல் போன்றவற்றில் விதுரனுக்கு இணையாக சொல்லக்கூடியவர்கள் வெகு சிலரே! காலத்தை வென்று நிற்கும் விதுரநீதி, இன்றைய அரசியல்வாதிகளுக்கு மிகவும் பொருந்தக்கூடியது! விதுரநீதியில் லட்சத்தில் ஒரு பங்கு நமக்கு கைகூடினாலும் அது நாம் செய்யும் பாக்கியமே!


Tuesday, September 21, 2010

இடிந்து விழுந்தது மேம்பாலம் அல்ல... இந்திய மானம்....

“இதனை இவனால் முடியும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”

-இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் இந்த நாட்டில் என்ன நடக்கும் என்பதை துல்லியமாக கணித்து எழுதியல்தானே, வான்புகழ் வள்ளுவர் தெய்வப்புலவன் என்று போற்றப்படுகிறார்.

எழுபதாயிரம் கோடி ரூபாயை வாணவேடிக்கை விட்டு நடத்தப்படும் காமன்வெல்த் போட்டி அமைப்புக் குழுவினருக்கு என்ன மாதிரியான தகுதி இருக்க வேண்டும் என்று நிர்ணயித்து இருக்க வேண்டாமா? “சுகாதாரக்குறை என்பதெல்லாம் ஒவ்வொருவர் பார்வையிலும் வித்தியாசப்படும்” என்று உளறிக்கொட்டும் செய்தி தொடர்பாளர், நடை மேம்பாலம் இடிந்து விழுந்து நான்கு பேர் உயிருக்கு போராடும் நிலையில், “இது சாதாரண மக்களுக்காக கட்டப்பட்ட நடை மேம்பாலம்தான்” என்று அரக்கத்தனமாக பேசும் டெல்லி முதல்வர், “புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் ஒன்றிரண்டு மின்சார வயர்கள் அப்படி இப்படி கிடப்பதும், கழிவறை சரியாக இல்லாததும், வளாகத்தில் நாய் தொல்லைகள் இருப்பதும் சர்வ சாதாரண விஷயம்தான்” என்று அலட்சியத்தின் உச்சக்கட்டமாக பேசும் அதிகாரி...

இவர்களுக்கெல்லாம் இந்தப் போட்டியை நடத்தும் அளவுக்கு தகுதி இருக்கிறதா என்று முடிவு செய்தது யார்? என்ன அடிப்படையில் அந்த முடிவு எடுக்கப்பட்டது? அரசு அலுவலகங்களில் பியூன் வேலைக்கு ஆள் எடுப்பதற்கே எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்று எத்தனை தேர்வுகள் வைக்கிறார்கள்? அப்படி இருக்கும்போது எழுபதாயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை கையாளப் போகும் நபர்கள் தகுதி எந்த அளவிற்கு இருக்க வேண்டும்?

முதலில் ஒரு விஷயத்தை நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சினை பற்றி ஊடகங்களில் செய்திகள் வெளிவரும்போது எல்லாம், “இது நாட்டின் கவுரவப் பிரச்சினை; எனவே, பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தாமல் போட்டிகள் நல்லவிதமாக நடக்க உதவ வேண்டும்” என்று விளையாட்டு அமைச்சர் எம்.எஸ். கில்லும், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தும், காமன்வெல்த் போட்டி அமைப்பு தலைவர் சுரேஷ் கல்மாடியும் மீண்டும் மீண்டும் கோரஸாக வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

எதோ இந்த விளையாட்டு நடத்தவது என்பது இந்த மூன்று பேருடைய தனிப்பட்ட சாதனை என்பது போன்றே இவர்கள் காட்டிக் கொண்டனர். இது இந்திய தேசத்தால் நடத்தப்படும் போட்டி. இதற்காக எழுபது ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இந்திய நாடு நடத்தும் போட்டி என்ற வகையில், நியாயமாக பிரதமர்தானே இந்தப் போட்டிகளின் நன்மை மற்றும் தீமைகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்? அவரது சார்பில், விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ். கில் தானே முதல் ஆளாக நின்றிருக்க வேண்டும்? விழாக்களில் மட்டும் முதன்மையாக நிற்பதற்கா இந்தப் பதவிகள்?

எதோ ஒரு மூன்றாம் நபர் போலவே பிரதமரும் அவரது அமைச்சரவை சகாக்களும் நடந்து கொள்கின்றனரே, இவர்கள் சற்றே வரலாற்றை திரும்பிப் பார்ப்பார்களா? 1982-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளை இதே டெல்லியில் நடத்திய பொது, இரண்டு வருடமே அவகாசம் இருந்த நிலையிலும், அன்றைக்கு இருந்து ஏகப்பட்ட தொழில்நுட்ப வசதிக் குறைவுகளையும் மீறி, மிகச் சிறப்பாக நடத்தி முடித்தார், இந்திரா காந்தி. அவருக்கு உறுதுணையாக இருந்து போட்டிகளை மிகச் சிறப்பாக நடத்தி முடித்து உலக அரங்கில் இந்தியாவின் கொடியை உயரப் பறக்க வைத்தார், ராஜீவ்காந்தி.

2003-ம் ஆண்டு போட்டி நடத்துவதற்கான அனுமதியைப் பெற்றுவிட்டு, ஏழு வருட அவகாசத்துக்குப் பின்னரும், எல்லாவித தொழில்நுட்ப வசதிகள் இருக்கும்போதும், பட்ஜெட் என்று ஒன்று இல்லாமல் பணத்தை தண்ணீராக செலவழித்தும், இவ்வளவு கேவலமான நிலைமையில் இந்தியாவின் மானத்தை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்களே, கொஞ்சமாவது தார்மீக பொறுப்பு இருந்திருந்தால் இவர்கள் ராஜினாமா செய்து இருக்க வேண்டாமா?

காமன்வெல்த் போட்டி என்ற பெயரில், கோடி கோடியாக கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை இரண்டு மாதங்களுக்கு முன்பே எல்லா ஊடகங்களும் தெள்ளத்தெளிவான ஆதாரங்களுடன் தோலுரித்துக் காட்டினார்களே, அப்போதாவது பிரதமர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? எத்தனையோ திறமையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ள இந்த நாட்டில் கல்மாடியை நீக்கினால் என்ன நடந்து விடும்? பிரதமருக்கு எதற்கு தயக்கம்? அவரை செயல்பட விடாமல் தடுத்தது எந்த சக்தி?

இரண்டு மாதங்களுக்கு முன்னரே பிரதமர் கட்சியை சேர்ந்த மணிசங்கர் அய்யர், “காமன்வெல்த் போட்டிகள் என்ற பெயரில் மன்னிக்க முடியாத தவறுகள் நடக்கின்றன; உலக அரங்கில் நமக்கு பெரும் கெட்டப்பெயரை இது வாங்கித் தந்துவிடும். எனவே, போட்டி நடக்கும்போது நாட்டிலேயே நான் இருக்க மாட்டேன்” என்று கொதித்துப் போய் சொன்னாரே, அந்தக் கருத்துக்காவது செவி மடுத்திருக்கலாமே...?

எல்லா விதத்திலும் நம்மோடு போட்டி போடும் சீனா, எவ்வளவு அருமையாக- உலகமே வியந்து பாராட்டும் வகையில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்திக் காட்டினார்களே, அவர்கள் இப்போது நம்மைப் பார்த்து கைகொட்டி சிரிக்க மாட்டார்களா?

அரசியல் அசுத்தம் எதுவும் கலக்காத நேர்மையான மனிதர் என்று மக்களால் நம்பப்பட்ட மன்மோகன்சிங், எப்படியாவது பதவியில் ஒட்டிக்கொண்டு இருந்தால் போதும் என்று நினைக்கும் மூன்றாம்தர அரசியல்வாதியாக மாறிவிட்டதைப் பார்க்கும்போது, மிகவும் வருத்தமாக உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழலும், காமன்வெல்த் ஊழலும்- கையாலாகாத்தனமும் அவரை ஏழேழு ஜென்மத்துக்கும் துரத்துமே...! அதைப்பற்றியாவது அவர் கவலைப்படுவாரா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. நமக்கு அந்தக் கவலை நிச்சயம் இருக்கிறது.

“இந்தியாவுக்கு விடுதலை கொடுக்க ஏன் மறுக்கிறீர்கள்” என்று அப்போதைய இங்கிலாந்து பிரதமர் சர்ச்சிலிடம் கேட்டபோது, அவர் என்ன பதில் கூறினாராம் தெரியுமா? “அந்த முட்டாள்களுக்கு ஆட்சி நடத்தவெல்லாம் தெரியாது; அவர்களிடம் எப்படி இவ்வளவு அருமையான நாட்டை ஒப்படைப்பது?” என்று கேட்டாராம்...

இங்கிலாந்து பிரதமருக்கு அன்றே தெரிந்த உண்மை இந்திய ஏமாளிகளுக்குத் தெரிந்திருந்தால், மன்மோகன்களும், கல்மாடிகளும், எம்.எஸ்.கில்களும் அட்டை போல பதவிகளில் ஒட்டிக்கொண்டு இருக்க முடியுமா? “நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்து விட்டால்...”

Thursday, September 16, 2010

வாய்ச்சொல் வீரர்கள்

எல்லா கிராமங்களிலும் வெட்டி பேச்சு பேசுவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கும். ஏதாவது ஒரு திண்ணையில் கூடி உள்ளூர் முதல் உலக விவாகரம் வரை இங்கு காரசாரமாக விவாதிக்கப்படும். இந்த விவாதங்கள் எந்த முடிவுகளையும் எட்டுவதற்கு அல்ல... மாறாக, அன்றைய பொழுதைக் கழிக்கும் வழி இது!

இப்போதெல்லாம் அரசு கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டங்களும் திண்ணைப் பேச்சு பேசும் கூட்டங்களாகவே மாறி விட்டனவோ என்ற சந்தேகம் நம் மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம், சாதிவாரி கணக்கெடுப்பு பிரச்சினை ஆகட்டும் அல்லது கொந்தளித்துக் கொண்டிருக்கும் காஷ்மீர் பிரச்சினை ஆகட்டும்- இது சம்பந்தமாக கூட்டப்படும் அனைத்துக் கட்சி கூட்டங்கள் பெரும்பாலும் சம்பிரதாய கூட்டங்களாகவே மாறி விட்டன.

இயற்கை அழகு கொஞ்சும் காஷ்மீர் பள்ளத்தாக்கில், அன்றாடம் நடக்கும் கல்லெறி சம்பவங்களும், அதை தொடர்ந்து நடக்கும் துப்பாக்கி சூடு- உயிர்ப்பலி சம்பவங்களும் நாடு முழுவதும் ஒருவித கவலையைத் தோற்றுவித்துள்ளது. இதனால், தலைநகரில் நடந்த காஷ்மீர் பிரச்சினை குறித்த அனைத்துக்கட்சி கூட்டம் குறித்து நாடு முழுக்க ஒருவித எதிர்பார்ப்பு நிலவியது.

காங்கிரஸ், பாரதீய ஜனதா, கம்யுனிஸ்டுகள், காஷ்மீர் ஆளும் கட்சி- எதிர்க்கட்சி மற்றும் அனைத்து முக்கிய கட்சிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டன. அனைத்து பத்திரிகைகளிலும், செய்தி சேனல்களிலும் தொடர்ந்து இதுகுறித்த செய்திகளும், அலசல்களும், விவாதங்களும் முழுமையாக ஆக்ரமித்து இருந்தன.

இதன் காரணமாக காஷ்மீர் மக்களிடையே மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிலும் எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே சென்றது. ஏதாவது ஒரு சமரசத் தீர்வு எட்டப்பட்டு, அதன்மூலம் வன்முறை சம்பவங்கள் கொஞ்சமாவது குறையாதா என்ற ஏக்கத்தினாலும், எதிபார்ப்பினாலும் விளைந்த எதிர்பார்ப்பு அது. ஆனால், இதுபோன்ற நப்பாசை எல்லாம் உங்களுக்கு வரலாமா என்று எக்காளத்துடன் அரசியல்வாதிகள் சிரிப்பதாகத்தான் இந்தக் கூட்டமும் நடந்து முடிந்தது.

வழக்கம் போல, காஷ்மீரில் நடக்கும் உயிரிழப்புகள் குறித்து தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொண்ட பிரதமர் மன்மோகன்சிங், வன்முறையால் எந்தத் தீர்வையும் எட்ட முடியாது என்ற வழக்கமான பல்லவியை பாடினார். மாநிலமே பற்றி எரியும்போதும், வார இறுதி நாட்களை தனது குடும்பத்தாருடன் செலவிட டெல்லிக்கு வந்துவிடும் முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவால் இந்தக் கூட்டத்துக்கு வரமுடியவில்லை.

சாப்பிட்ட பிஸ்கட், குடித்த காபிக்கு வஞ்சகம் செய்யாமல் தங்கள் பங்குக்கு ஏதேதோ பேசினர், அனைத்துக்கட்சித் தலைவர்கள். கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு விடாமல் “எல்லாவற்றிற்கும் காரணம் ஓமர் தான்” என்று சாடினார், காஷ்மீர் எதிர்க்கட்சித் தலைவர் மெஹபூபா. யாராலும் தெளிவாக- தீர்க்கமாக ஒரு பாதையைக் காட்ட முடியவில்லை. கூட்ட முடிவில், அனைத்துக்கட்சி குழுவினரை காஷ்மீருக்கு நேரடியாக அனுப்பி நிலவரத்தை அறிந்து வர முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான அரசியல் தலைவர்கள் நீண்ட காலமாக அரசியலில் இருப்பவர்கள்தான். சுதந்திரம் பெற்றது முதல் காஷ்மீர் பிரச்சினையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்தவர்கள்தான். இப்போது ஆரம்பித்த பிரச்சினையின் பின்னணியும் என்ன என்று தெரியாதவர்கள் அல்ல. அப்படி இருந்தும் ஒரு குழு அமைத்து, அந்த குழு அங்கு சென்று நேரடியாக நிலவரத்தைக் கண்டு வரவேண்டும் என்று இவர்கள் தீர்மானம் செய்து இருப்பது மீண்டும் மீண்டும் மக்களை, குறிப்பாக காஷ்மீர் மக்களை ஏமாற்றும் செயலே அன்றி வேறு எதுவும் இல்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக, பிரச்சினை உக்கிரமாக இருக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு இந்தக் குழு செல்லாமல், சற்றே அமைதியுடன் இருக்கும் ஜம்மு பகுதிக்கு தான் செல்லப் போகிறதாம். இதைவிட கேலிக்கூத்தான விஷயம் வேறு இருக்க முடியாது.

உளவுத்துறையினரும், அரசு எந்திரங்களும், காஷ்மீர் கட்சித் தலைவர்களும், அறிஞர்களும் இந்தப் பிரச்சினை குறித்து தர முடியாத விஷயங்களையும், ஆலோசனைகளையும் இந்தக்குழு தந்து விடும் என்ற நம்பிக்கை காஷ்மீர் மக்களுக்கு எப்படி ஏற்படும்? ஏதாவது ஒரு சமரசத் திட்டம் அரசால் அளிக்கப்படும் என்று நப்பாசையுடன் காத்திருந்த மக்களுக்கு இதுபோன்ற முடிவுகள் ஏமாற்றத்தைத் தருவது மட்டுமின்றி, மேலும் மேலும் வன்முறை பாதைக்கு அவர்களைக் கொண்டு சென்று விடாதா?

எந்தப் பிரச்சினை என்றாலும் முடிவு எடுக்காமல் இழுத்தடிப்பதுதான் ராஜதந்திரம் என்ற ஏமாற்று வேலையை இன்னும் எத்தனை நாள்தான் அரசியல்வாதிகள் மேற்கொள்வார்கள்?

“நெஞ்சில் உரமும் இன்றி, நேர்மைத் திறனும் இன்றி வஞ்சகம் செய்து வாழும் இந்த வாய்ச்சொல் வீரர்கள்” திருத்தப்படுவார்களா?

Tuesday, September 14, 2010

யாரிடம் போய் முறையிடுவது?

சமீபத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய இரண்டு தீர்ப்புகள் பலரது புருவத்தை உயர்த்தியது. முதலாவது தீர்ப்பு, “விருப்பப்பட்டு கொடுக்கப்படும் வரதட்சணையைப் பெற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை” என்பதாகும். மற்றொன்று, “மணமகன்- மணமகள் சம்மதத்தோடு செய்யப்படும் மைனர் திருமணம் செல்லுபடியாகும்” என்று அளிக்கப்பட்ட தீர்ப்பு.

இந்திய சமூக அமைப்பில் “வரதட்சணைக் கொடுமை” என்பது எண்ணற்ற குடும்பங்களில் தினம் தினம் சூறாவளியை வீசிக்கொண்டேதான் இருக்கிறது... மாட்டை விலைபேசுவது போல மணமகளை விலைபேசும் அவலத்தை நீக்குவதற்கான போராட்டத்தில் ஓரளவுக்கு வெற்றி பெற்று இருக்கிறோம் என்று நம்பிக்கொண்டு இருந்தவேளையில், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு வரதட்சணைக் கொடுமை ஒழிப்பில் ஈடுபட்டிருக்கும் சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் பேரிடியாகத்தான் அமைந்திருக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு நெருங்கிய உறவினர் ஒருவர் தனது மகனின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க வந்திருந்தார். அவருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, “தனது மகனுக்கு 150 சவரன் நகை வரதட்சணையை பெண் வீட்டார் கொடுப்பதாக” குறிப்பிட்டார். “அவர்கள் கொடுக்கிறார்களா? அல்லது நீங்கள் வற்புறுத்தி வாங்குகிறீர்களா?” என்று நான் கேட்டேன்.

அதற்கு அவர் கூறிய பதில், நாம் இன்னும் எந்த மாதிரியான மாயையில் வாழ்கிறோம் என்பதை எனக்கு உணர்த்தியது. “எனது சகோதரர் மகனுக்கு 125 சவரன் நகை வரதட்சணையாக தந்தார்கள். அதை விட அதிகமாக வாங்கினால்தான் நமக்கு கவுரவமாக இருக்கும் என்று எனது மனைவி உறுதியாக கூறிவிட்டார். இதை பெண் வீட்டாரிடம் சொல்லியபோது, அவர்களும் ஒத்துக்கொண்டனர்” என்று வெகு இயல்பாக கூறினார்.

எவ்வளவோ துறைகளில் இந்தியா படுவேகமாக முன்னேறி விட்டது என்று நாம் நெஞ்சை நிமிர்த்திக் கொள்கிறோம். ஆனால், என்றென்றும் இணைந்து வாழப்போகும் இல்லற வாழ்க்கையில் வரதட்சணைக் கொடுமையை இன்னும் நாம் விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதும், அதற்கு வறட்டு கவுரவம் காரணமாக இருப்பதும், நாம் நாகரீக முகமூடி அணிந்த காட்டுமிராண்டிகள் தான் என்பதை எனக்கு மிகத் தெளிவாகவே உணர்த்தியது. அதிலும், வரதட்சணை பேரங்களுக்கு பின்னால் பெண்களே மிக முக்கிய பங்கு வகிப்பது, இந்த பிரச்சினையை ஒழிப்பதில் பெரிய தடைக்கல்லாக விளங்குகிறது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வேறு வரதட்சணை பிரச்சினைக்கு எதிரான போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் விதமாக அமைந்து விட்டதை மறுப்பதற்கில்லை.

மற்றொரு தீர்ப்பு மைனர் திருமணம் பற்றியது. ஒருகாலத்தில் இந்தியப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளில் மிக முக்கியமானது பாலிய விவாகமும், உடன்கட்டை ஏற்றுதலும்தான்! ராஜாராம் மோகன் ராய் போன்ற பெருந்தலைவர்களின் அயராத முயற்சியின் விளைவாக உடன்கட்டை கொடுமை ஒழிக்கப்பட்டு விட்டாலும், பாலிய விவாகம் மட்டும் முற்றிலும் ஒழிக்கப்படாமல் ஆங்காங்கே தலைநீட்டிக் கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, மணமக்களின் சம்மதத்தோடு நடைபெறும் பாலிய விவாகங்களை அங்கீகரிக்கலாம் என்கின்ற ரீதியில் அமைந்து விட்டது இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளைத் தோற்றுவித்து இருக்கிறது.

நாட்டின் பிற்பட்ட கிராமங்களில், வறுமை மற்றும் அறியாமை காரணமாகத்தான் இத்தகைய திருமணங்கள் இன்னும் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. பெண் குழந்தை என்பதே மிகப்பெரிய சுமை என்று கருதும் பிற்போக்குத்தனமான மக்களிடையே இவ்வித பழக்கம் அதிகமாக உள்ளது.

12, 13 வயதே நிரம்பிய நிலையில், உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் எந்தவித பக்குவத்தையும் எட்டாத சிறுமிகளிடையே மனப்பூர்வமான சம்மதத்தை பெறுவது என்பது எவ்வளவு பெரிய ஏமாற்றுவேலை என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான்! “மனப்பூர்வமான” என்கின்ற விஷயத்தில் எந்த அளவுகோலை இந்த தீர்ப்பில் பயன்படுத்தினார்கள் என்பதும் கேள்விக்குரிய விஷயம்தான்!

மொத்தத்தில் சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளையும், பிற்போக்கு கொடுமைகளையும் களைய வேண்டிய போராட்டத்தில், சட்டத்தின் உச்ச அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள்தான் மிக முக்கிய பங்கு வகிக்க வேண்டும். ஆனால், அவர்களே வேறுவிதமாக தீர்ப்பு அளிக்கும்போது, நம்மை நாமே நொந்து கொள்வதைத் தவிர வேறு என்ன வழி?

தங்கப்பதக்கம் திரைப்படத்தில் வருவது போல, “அந்த தெய்வமே கலங்கி நின்றால், யாரிடமே போய் முறையிடுவது?”