கசாப்! – நூறு கோடி இந்தியர்கள் மனதிலும் வெறுப்பின்- கோபத்தின்- ஆற்றாமையின்- அவமானத்தின் சின்னமாய் ஒன்றரை ஆண்டுகளாக, நெருஞ்சி முள்ளாக உறுத்திக் கொண்டிருந்தவன். பட்டப்பகலில் ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, “கொலை எனக்கு தொழில்” என்பது போன்று, அப்பாவி மக்களை கண்ணை மூடிக் கொண்டு சுட்டுத் தள்ளியவர்களில், உயிரோடு பிடிபட்ட ஒரு பாவி!
டி.வி. சேனல்களில் வரும் ரியாலிட்டி ஷோக்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில், கேமரா கண்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தங்களது கொலைத்தொழிலை அரங்கேற்றிய இந்த கயவன், “தப்பு செய்தான்” என்று நிரூபிப்பதற்கே நமது சட்டத்திற்கு ஒன்றரை வருடம் ஆகியுள்ளது. அதிலும், உடந்தையாக இருந்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட இரண்டு இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்- சாட்சிகள் போதவில்லையாம்!
நமது நீதித்துறை நேர்மையாக நடப்பதற்கு இதுவே சாட்சி என உள்துறை அமைச்சரும் பெருமிதப்படுகிறார். இவ்வளவு பெரிய மாபாதக செயலை செய்தவர்களை குற்றத்தைக் கூட நிரூபிக்கத் திராணி இல்லாத விசாரணை அதிகாரிகளை கண்டிப்பதை விட்டுவிட்டு, பெருமிதப்படும் போக்கை என்னவென்று சொல்ல...?
இந்தியாவை மட்டுமல்ல, உலகத்தையே பதைபதைக்க வைத்த நேரடி தீவிரவாத செயலை செய்தவர்களை தண்டிக்கவே நமக்கு சாட்சிகள் போதவில்லையே... இந்த லட்சணத்தில் உள்நாட்டில் மறைமுக தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று எப்படி நம்புவது?
ஆம்- கேதான் தேசாய் நினைவிருக்கிறதா? ஒழுக்கத்திற்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக, எளிமையின் சின்னமாக வாழ்ந்த மொரார்ஜி தேசாய் வாழ்ந்த இந்த புண்ணிய தேசத்தில்தான் கேதான் தேசாய் போன்ற பணப்பேய்களும் வாழுகின்றன! ஆயிரம் ரூபாய் நோட்டை முழுதாக கண்ணால் கண்டிராத மக்களை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் நமது நாட்டில், 1800 கோடி ரூபாய் பணத்தை ரொக்கமாக வீட்டில் வைத்திருந்த மாமனிதர்தான் இந்த கேதான் தேசாய்!
எவ்வளவு ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் சேர்ந்தால் 1800 கோடி ரூபாய் வரும் என்பதை கணக்கிட ராமானுஜர் கூட சற்று திணறித்தான் போவார்! ஆனால், இந்த பணப்பேய் திணறாமல், சிதறாமல் இவ்வளவு பணத்தையும் தனது வீட்டில் ஒளித்து வைத்து, பார்த்து பார்த்து ஆனந்தப்பட்டுக் கொண்டு இருந்திருக்கிறது!
வாழும் கடவுள்களாக மக்கள் கருதும் டாக்டர்களை உருவாக்கும் கல்லூரிகளை அனுமதிப்பதில் செய்த ஊழல் மூலம் சம்பாதித்த- அல்ல, அல்ல, கொள்ளை அடித்ததின் மூலமாக கிடைத்த பணம்தான் இது! இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது இந்த பணம் மட்டுமல்ல, டன் டன்னாக தங்கக் கட்டிக்களும்தான்! இவற்றின் மொத்த மதிப்பைக் கணக்கிட்டால், ஒரிசா போன்ற மாநிலங்களின் ஒரு வருட பட்ஜெட்திற்கு நிகராக வருகிறது!
இவ்வளவு பணத்தை லஞ்சமாக கொட்டிக் கொடுக்கும் மருத்துவக் கல்லூரிகள், எந்த மாதிரியான டாக்டர்களை உருவாக்குவார்கள்? அவர்களால் எத்தனை லட்ச மக்களின் உயிருக்கு அபாயம் உள்ளது? எத்தனை கோடி மக்கள் நிரந்தர ஊனமாகக் கூடிய பேரபாயம் உள்ளது? இது ஒருவகையான தீவிரவாதம் இல்லையா? இவர்கள் தீவிரவாதிகளுக்கு இணையான தண்டனை கொடுக்கப்பட வேண்டியவர்கள் அல்லவா?
அரசியல்வாதிகளின் ஆதரவு இல்லாத ஒரு கசாப்புக்கு தண்டனை கொடுக்கவே இவ்வளவு அவகாசமும் சாட்சிகளும் தேவைப்படுகின்றனவே, எல்லா ஆதரவுகளும் பணபலமும் இருக்கும் வாய்ப்புள்ள கேதான் தேசாய் குற்றம் நிரூபிக்கப்படுமா? அல்லது இதற்கும் சாட்சிகள் இல்லாமல், இந்தப் பணம் முழுவதும் அவரது சேவையைப் பாராட்டி வழங்கப்பட்ட பரிசுகள் என்று கூட சொல்லுவார்கள்!
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்....!
No comments:
Post a Comment