விதுர நீதி!

புராண காலம் தொடங்கி, இன்றைய நவீன காலம் வரை எவ்வளவோ அமைச்சர்கள் தங்கள் மதிநுட்பத்தை பல்வேறு விதமாக, பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால், திருதராஷ்டிரன் அமைச்சரவையை அலங்கரித்த விதுரன் போன்ற மதிநுட்பமும், நேர்மையும், யாருக்கும் அஞ்சாமல் நல்லவற்றை எடுத்துரைத்தல் போன்றவற்றில் விதுரனுக்கு இணையாக சொல்லக்கூடியவர்கள் வெகு சிலரே! காலத்தை வென்று நிற்கும் விதுரநீதி, இன்றைய அரசியல்வாதிகளுக்கு மிகவும் பொருந்தக்கூடியது! விதுரநீதியில் லட்சத்தில் ஒரு பங்கு நமக்கு கைகூடினாலும் அது நாம் செய்யும் பாக்கியமே!


Sunday, September 23, 2012

அன்பு... காலாவதியாகி விட்ட கடைச்சரக்கு...


“உன் கண்ணில் நீர் வழிந்தால், என் நெஞ்சில் உதிரம் கொட்டுமடி;
என் கண்ணின் பாவையன்றோ, கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ”

-ஆனால், சமீபத்தில் நடைபெறும் சம்பவங்களைப் பார்த்தால், இந்த வார்த்தைகள் தலைகீழாக மாறிப்போனதை உணர முடிகிறது. தனது அன்பு நிராகரிக்கப்பட்டதை தாங்கிக் கொள்ள இயலாமல் பெண்களை கொலை செய்யும் செய்திகளை தினம்தினம் படிக்கும்போது நெஞ்சு பதறுகிறது...

மனித வாழ்க்கையின் மிக உன்னதமான அம்சம் அன்பு என்பது நமது குருதியிலேயே கலந்த ஒன்று... குறிப்பாக, தமிழக இலக்கியங்களிலும் கலாச்சாரத்திலும் அன்பு என்ற சொல்லுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மிகவும் உணர்வுபூர்வமானது. கால காலமாக நாம் பார்த்த திரைப்படங்களில் தனது அன்பு நிராகரிக்கப்பட்டாலும், அதன் உண்மைத் தன்மை மாறாமல் காத்து வரும் தியாகிகளைத்தான் கண்டிருக்கிறோம்... ஆனால், சமீப காலமாக, திரைப்படங்களில் “அட்ரா அவளை... வெட்றா அவளை” என்பன போன்ற வரிகளை அதிகம் கேட்கவும், காணவும் நேரிடுகிறது...

உண்மையில், அன்பு என்பதின் உண்மையான நிலை என்ன? என்று மனசாட்சியுடன் சிந்தித்தால், “கலியுகத்தில் முதலில் காணாமல் போனது அன்பு” தான் என்பதை எளிதாக உணர முடியும்... அதிலும், ஆண்- பெண் இருவரிடையேயான உண்மையான நட்பு தான் முதலில் பலியாகியுள்ளது என்றால், அது மிகையல்ல.

பொதுவாக, ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான நட்பு என்பதில் இருவரும் மேலோட்டமாகவே இருந்து விட்டாலோ, இருவருமே உண்மையான ஆழமான நட்பு கொண்டிருந்தாலோ அது பிரச்சினையில் முடிவதில்லை; இரு மனங்களையுமே காயப்படுத்துவதில்லை. ஆனால், இரண்டில் ஒருவர் உண்மையான அன்பு கொண்டிருந்த போது, மற்றொருவர் மேலோட்டமான உணர்வை கொண்டிருக்கும் போது தான் மனங்கள் காயப்படுவதும் அதைத் தொடர்ந்து பிரச்சினைகள் எழுவதும் நடைபெறுகிறது.

ஆனால், அன்பின் உண்மையான அடிப்படை தத்துவம் என்னவாக இருக்க முடியும்? நாம் உண்மையான அன்பு செலுத்திய ஒருவர், நம்மிடம் பதிலுக்கு இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாமாக முடியுமா? அது வியாபாரமாகி விடாதா? தூய்மையான அன்பை ஒருவர் மீது செலுத்தி விட்ட பிறகு, அவர்களிடம் இருந்து நமக்கு உண்மையான அன்பு பதிலுக்கு கிடைக்கவில்லை என்றாலும் அவர்களுடைய நலனை நாடுவது மட்டும்தானே மாசற்ற அன்பாக இருக்க முடியும்? இதை சரியாக உணராமல், பழிக்கு பழி வாங்குவது என்பது, தனது அன்பை தானே இழிவுபடுத்திக் கொல்வதாகத்தானே இருக்க முடியும்?

இந்த நவநாகரீக காலத்தில் பெண்களின் சுதந்திரம் அதிகரித்து வரும் அதே வேளையில், ஆடம்பரமான வாழ்வு பெரும்பாலான பெண்களின் கண்களையும் கருத்தையும் கவரும் நிலையில், பல பேருக்கு நட்பு என்பது பொழுதுபோக்கு என்பதை தாண்டி வேறொன்றும் இல்லை என்றாகி விட்டது. ஈஸ்கேப்களிலும், மாயாஜால்களிலும் சினிமாவும், KFC உணவும், லைஃப் ஸ்டைல்களில் ஆடைகளும், நவீன கேட்ஜெட்களும் இந்த போழுதுபோக்கின்போது அவர்களுக்கு முக்கிய அம்சமாக அமைந்து விடுகிறது. மேலோட்டமாக பழகும் ஆண்களுக்கோ, அழகும், கவர்ச்சியும் மட்டுமே கண்களுக்கு புலப்படுகிறது.

பிறகு, வாழ்க்கையின் முக்கியமான படிக்கட்டில் கால் பாதிக்கும் போது, இவற்றை எல்லாம் தாண்டி வெளிநாடு, சொகுசு கார் மற்றும் நிலையான எதிர்காலம் கண்ணுக்குத் தெரியும்போது, பழைய நட்பு வேண்டாத ஒன்றாக மாறி விடுகிறது. ஆனால், சூழலின் யதார்த்தம் தெரியாத மற்றொரு தரப்போ, ஏமாற்றத்தின் பிடியில் சிக்கி, புத்தி பேதலித்து விபரீதத்தில் இறங்கி விடுகிறது. வன்முறையில் இறங்கும் அளவுக்கு கொடூரமாக மாறிவிடுகிறது. ஆனால், இதிலும், தங்களது எதிர்ப்பையோ ஏமாற்றத்தையோ பெண்களால் வெளிக்காட்ட இயலவில்லை என்பது உண்மைதான்... (போலீஸ் நிலையத்துக்கு சென்று நியாயம் கேட்கும் ஒரு சில பெண்களைத் தவிர...)

உண்மையில் அன்பு என்பது எதையும் எதிர்பாராதது; அன்பு கொண்டவர்களுக்கு நல்லது தவிர வேறு எதையும் நாடாதது என்பது நன்கு புரிய வைக்க வேண்டும். சுயநலம் என்பது துளியும் இல்லாதது என்பதை உணர்த்த வேண்டும்; “என்னுயிர் நின்னதன்று என்று இருக்க வேண்டுமே தவிர, உன்னுயிர் என்னது என்று இருக்கக் கூடாது” என்பதை புரிய வைக்க வேண்டும். ஆனால், எல்லாமே இயந்திரத்தனமாக, பொருள் சார்ந்து, சுயநலம் மிக்கதாக மாறி விட்ட பிறகு, இதை கற்றுக் கொடுக்க கூட யார் இருக்கப் போகிறார்கள்?

அதனால்தான் சொல்கிறேன்... கலியுகத்தில் மனித வாழக்கையில் காலாவதியான முதல் அம்சம் அன்பு தான்...!!!

Monday, September 17, 2012


முதலீடா? முழுங்கப் போகும் முதலையா?

பாரத திருநாட்டை விட்டு பரங்கியரை வெளியேற்றி சரியாக 65 ஆண்டுகள்தான் நிறைவடைந்துள்ளன. தற்போது சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்ற பெயரில் அவர்களை தாம்பூலம் வைத்து அழைக்கும் முயற்சி கனஜோராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்னரும் பல்வேறு துறைகளில் அந்நிய முதலீடு, இந்தியாவில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்பது ஒட்டுமொத்த இந்தியாவை அடகு வைக்கும், அல்ல, அல்ல... அடிமை சாசனம் எழுதி வைக்கும் நிகழ்வேயன்றி வேறொன்றும் இல்லை...

விவசாயிகளிடம் நேரடியாக பெரு முதலாளிகள் கொள்முதல் செய்யும் வாய்ப்பு ஏற்படும் என்பதால் இடைத்தரகர்கள் இன்றி, விவசாயிகளே நேரடியாக பயனடையும் சிறப்பான திட்டம் இது என்பது ஆளும் தரப்பினரின் வாதம்... இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்று பார்ப்போம்... இவர்கள் கூறியது போன்று ஆரம்பத்தில் நேரடி கொள்முதலும், அதனால் சற்று கூடுதல் விலையும், பல நேரங்களில் ரொக்கமாக முன்பணமும் விவசாயிகளுக்கு கிடைக்கலாம்... இதனால், அவர்களும் சொர்க்கத்தை கண்டுவிட்டதாகவே தொடக்கத்தில் நம்பலாம்... ஆனால், ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு என்ன ஆகும்? ஒவ்வொரு பகுதியிலும் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும்... நிறைய முன்பணம் கொடுத்து, தங்களது கைப்பிடிக்குள் முழுமையாக விவசாயிகளை அவர்கள் வைத்துக் கொள்வார்கள்... அடுத்ததாக, “பொருளாதார பாதுகாப்பு” என்ற போர்வையில் குறிப்பிட்ட ஆண்டுகள் வரை தங்களிடம் மட்டுமே குறிப்பிட்ட விலைக்கு விளைபொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தம் தரப்படும். மெல்ல மெல்ல, அந்நிய நிறுவனம் என்ற பகாசூரன் வயிற்றுக்குள் அப்பாவி விவசாயி அடைக்கலம் ஆகி விடுவான்.... சில காலங்களுக்கு முன்பு, ஒவ்வொரு பகுதியிலும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த ஜமீன்தார்களை வேறு உருவத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் காணலாம்... அந்த நிலையில், மன்மோகன்களும், சிதம்பரம்களும், சோனியாக்களுமா இதற்கு பொறுப்பு ஏற்கப் போகிறார்கள்?

எதற்கெடுத்தாலும், பிரிட்டனை பார், ஜெர்மனியை பார், பிரான்சை பார் என்று மேலை நாடுகளை உதாரணம் காட்டும் இவர்கள், அந்த நாட்டின் மக்கள் தொகை என்ன? அவர்கள் நாட்டு வளம் என்ன? என்பனவற்றை எல்லாம் இந்தியாவுடன் ஒப்பிடுவார்களா? நமது ஒப்பீடு எப்போதும் சீனாவுடன் இருப்பதே சரியானதாக இருக்க முடியும்... மக்கள் தொகை ஏறக்குறைய ஒரே அளவில் இருக்கும் இந்த நாட்டை ஒப்பிடுவதுதானே முறையாக இருக்க முடியும்? இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்கள் தொகை எண்ணிக்கையே ஒட்டுமொத்த ஐரோப்பாவை விட அதிகம் என்பதை இந்த பொருளாதார மேதைகள் கருத்தில் கொள்ளாதது ஏன்?

ஏன் தெரியுமா? இவர்கள் அனைவரும் போலி கவுரவத்துக்காக வாழ்பவர்கள்... இவர்களுக்கு 120 கோடி இந்தியர்களின் வாழ்க்கை ஸ்திரத்தன்மையோ, அவர்களது மேம்பாடோ, அல்லது அவர்களிடம் இருந்து கிட்டும் பாராட்டோ முக்கியம் அல்ல... ஒபாமாவும், கேமரூனும், ஏஞ்சலாவும் பாராட்டி விட்டால் போதும், தங்களது ஜென்மம் சாபல்யம் அடைந்து விட்டதாகவே கருதுவர்... போதாக்குறைக்கு, ஆங்கில செய்தி சேனல்களில் சொகுசு சோபாக்களில் ஒய்யாரமாக சாய்ந்து கொண்டு, இந்தியாவில் கிராமம் என்று ஒன்று இல்லாத மாதிரியும், டெல்லியும், மும்பையும், பெங்களூருவும் (இந்தப் பட்டியலில் சென்னை கூட நிறைய சமயங்களில் இடம்பிடிக்காது) மட்டுமே ஒட்டுமொத்த இந்தியா என்று பேசிக் கொண்டிருக்கும் அறிவுஜீவிகளும் பாராட்டித் தள்ளினால் போதும்... நாற்பது கோடி இந்தியன் ஒருவேளை சோற்றுக்கு அல்லல்படுவதை பற்றி யாருக்கென்ன கவலை?

போலி கவுரவத்துக்கும், பொய்மை வாழக்கைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைகளை காவு கொடுத்து விட்ட நாம், ஒட்டுமொத்த இந்தியாவையும் முதலைகள் முழுங்கிவிட அனுமதிக்கப் போகிறோம்... “பெப்சி”க்களும், “கோக்”களும் ஆக்டோபஸ் போன்ற குளிர்பான சந்தையையே இன்று முழுங்கி ஏப்பம் விட்டு விட்டதை கண்டபிறகும், இதை ஆதரிப்போரை என்ன சொல்வது? காந்தியும், நேதாஜியும் பிறக்காமலேயே இருந்திருக்கலாம்... பரங்கியரே தொடர்ந்து ஆட்சி செய்திருக்கலாம்...!!!

Thursday, September 13, 2012

கருத்து சுதந்திரத்தின் காட்டுமிராண்டித்தனம்...



லிபியாவின் பென்காஸி நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், அமெரிக்க தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீபன்ஸ் உள்பட நான்கு அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ள சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு காரணம் என்ன தெரியுமா? கருத்து சுதந்திரம் என்ற போர்வையில், இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சுமார் 14  நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படம் ஒன்று “யூ-டியூப்”பில் வெளியானதுதான்...

பொதுவாகவே, ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் மாற்று மதம் குறித்து விமர்சிப்பது என்பது அநாகரீகமான ஒன்று. அதிலும், மிகவும் மட்டரகமான எண்ணத்துடன், கேவலமான ரசனையுடன் எடுக்கப்பட்டுள்ள இந்த குறும்படத்தினால் ஆத்திரம் அடைந்த இஸ்லாமிய தீவிரவாதிகள், அரபு நாடுகளில் ஆங்காங்கே அமெரிக்கத் தூதரகம் மேல் தாக்குதல் நடத்தினர். ஏனெனில், இந்தப் படத்தை வெளியிட்டுள்ளது அமெரிக்காவில் வசிக்கும் பசில் என்பவர் என்று கூறப்படுகிறது.

இணையதளம் என்பது தொழில்நுட்பம் நமக்கு தந்திருக்கும் ஒரு அற்புதமான வரப்பிரசாதம்...! ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல், இணையதள உலகில் சமூக வலைதளங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய பிற தளங்களின் செயல்பாடுகள் மெல்ல மெல்ல விபரீதப் பாதைக்கு சென்று கொண்டிருக்கின்றன என்பதை உணருபவர்கள் வெகுச் சிலரே. எந்தவிதமான படைப்புகளையும், யார் வேண்டுமானாலும் யூ-டியூப்பில் வெளியிட முடியும் என்பது உண்மையான, தகுதியான படைப்பாளிகளுக்கு அருமையான வாய்ப்பு என்பதில் ஐயமே இல்லை. ஆனால், விபரித புத்திக்காரர்களுக்கு....??? அவர்களுக்கு இது அருமையான வாய்ப்புதான்... தங்களின் அனைத்து விதமான அலங்கோலங்களையும் தங்கு தடையின்றி அரங்கேற்ற அருமையான தளமாக இதைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.

விளைவு...? நடைபெற்ற எந்த சம்பவத்துக்கும் சம்பந்தம் இல்லாத நான்கு அப்பாவிகளின் உயிர்கள் அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளது. ஒரு மதத்தைச் சேர்ந்த தீவிரவாதிகளை தூண்டி விட வேண்டும் என்று விரும்பிய விஷமிகளுக்கு, தங்களது எண்ணம் ஈடேற இவ்வளவு எளிதான வழிமுறைகள் இருப்பதைக் கண்டு உலகம் முழுக்க உள்ள விஷமிகள் ஆனந்தக் கூத்தாடுவார்கள் என்பது மட்டும் திண்ணம்...

உலகம் முழுக்க உள்ள படைப்பாளிகள் எளிதாக தங்கள் படைப்பை வெளியிட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த யூ-டியூப் நிர்வாகம், நல்ல படைப்புகள் என்று கூட பார்க்க வேண்டாம், குறைந்தபட்சம் இதுபோன்ற விபரீத விஷயங்களை அரங்கேற்றும் தளமாக தங்களது அமைப்பு மாறி விடாமல் தடுக்க முயற்சிக்க வேண்டாமா? அருவருக்கத்தக்க, ஆபாசமிக்க ஏராளமான குப்பைகளும் இதில் இருந்தபோதிலும், அவையெல்லாம் தனி மனிதன் மனநிலை மற்றும் குணநலன்களை மட்டுமே பாதிக்கக் கூடியவை; ஆனால், தற்போது அரங்கேறி இருக்கும் விபரீதமான விஷயங்கள், இரு சமுதாயங்கள் இடையே, இரு நாடுகள் இடையே தீராத வன்மத்தை ஏற்படுத்தி விடக்கூடியவை என்பதால், இவை அரங்கேறாமல் தடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பு யூ-டியூப் நிர்வாகத்துக்கு உள்ளதல்லவா?

யூ-டியூப்”பில் அரங்கேறும் அனைத்தையும் தங்களால் கண்காணிக்க முடியாது என்று சொத்தை வாதத்தை அந்த நிர்வாகம் முன்வைக்கும் என்றால், இதுபோன்ற ஒரு வசதியையே அவர்கள் ஏற்படுத்தி தந்திருக்கக் கூடாது என்பதுதான் அதற்கு பதிலாக இருக்கும். குடியிருப்பு பகுதியில் கொடிய காட்டு மிருகங்களை வளர்த்து விட்டு, அது யாரையாவது தாக்கினால், அதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்று யாராவது கூறினால், இந்த சமுதாயம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா?

என்றோ நடந்து முடிந்த இரண்டாம் உலகப்போர் ஏற்படுத்திய இழப்புகளுக்கு இன்றைக்கும் பல நாடுகளும் பல்வேறு சமூகங்களும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

சமூக வலைதளங்கள் மூலமாக ஏற்கனவே தனிப்பட்ட வாழ்க்கைகள் சத்தமின்றி சின்னாபின்னமாகத் தொடங்கியுள்ள நிலையில், ஒட்டுமொத்த சமுதாயத்தை குறிவைத்து செய்யப்படும் விஷமங்களுக்கும் அந்த தளங்கள் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமா? கருத்து சுதந்திரம் என்ற பெயரில், காட்டுமிரான்டித்தனங்கள் அரங்கேறுவது தான் நவ நாகரீகமா? என்பதை சுய பரிசோதனை செய்துகொள்ளும் தருணம் வந்து விட்டது. ஆரம்பத்திலேயே சிந்திக்கவில்லை எனில், இழப்பு மிகப்பெரிதாக இருக்கப் போவது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை...! 

Monday, September 10, 2012


“அதையும் தாண்டியது” குடும்பம்...


“அரியணைக்கு அப்பாலும் அஸ்தினாபுரம் உள்ளது” என்பது மகாபாரதத்தில் பீஷ்மரிடம் விதுரர் கூறும் பொருள் பொதிந்த ஒரு வாக்கு...! ஆம்...! அஸ்தினாபுர மன்னன் என்ற அடிப்படையில் துரியோதனன் மீது அளவு கடந்த விசுவாசம் காட்டும் பீஷ்மரை, மன்னன் என்ற தனி மனிதனை தாண்டி, ஒட்டுமொத்த மக்கள் நிறைந்த அஸ்தினாபுரத்துக்கு எது நல்லதோ அதை செய்யும்படி விதுரர் வேண்டுவதே அந்த வாக்கின் பொருள்...

உலகிலேயே குடும்ப அமைப்பில் மிகவும் பாரம்பரியமும், பழமையும் கொண்ட இந்தியாவில், தற்போது ஒரு புதிய சட்டத்தை அமல்படுத்த தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வேலைக்கு செல்லாமல் குடும்பத்தை மட்டுமே கவனித்துக் கொண்டு வீட்டில் இருக்கும் மனைவிக்கு கட்டாயம் ஒரு தொகையை சம்பளம் போன்று மாதா மாதம் கணவன் தரவேண்டும் என்பதுதான் அது...

கூட்டுக்குடும்பத்துக்கு பேர்போன இந்தியாவில், அந்த முறை சிறிது சிறிதாக மாறிக் கொண்டே வந்தாலும், இன்றைக்கும் அடிப்படை குடும்ப அமைப்பு என்பது அப்படியேதான் உள்ளது. சில பெருநகரங்களில் உள்ள சில உயர் இடங்களில் இந்த அமைப்பு சற்று மாறுபட்டிருக்கலாம்; ஆனால், பெரும்பான்மையான குடும்பங்களில் இந்திய குடும்பங்களுக்கே உரிய அடிப்படை கட்டமைப்பு சிதையாமல் தான் உள்ளது. கணவனின் வருவாயை மனைவிக்கு தெரியும் வகையிலேயே கையாளுவதும், குடும்பத்தின் தேவைகளை சேர்ந்தே முடிவு செய்வதும் (விதிவிலக்குகளை விட்டு விடலாம்), இன்னும் சொல்லப் போனால் நிதி தொடர்பான பல முடிவுகளை மனைவி எடுப்பதும்தான், நமது பாரம்பரியமாக உள்ளது.

வீட்டை நிர்வகிக்கும் பெண்களின் பங்கு, அலுவலகத்துக்கு சென்றோ வியாபாரம் செய்தோ சம்பாதிக்கும் ஆண்களின் பங்கிற்கு சற்றும் குறைவில்லாதது என்பதில் யாருக்கும் மறுப்பு இருக்க முடியாது. குறிப்பாக, குழந்தைகள் பிறந்ததில் இருந்து, அவர்களை பாலூட்டி, தாலாட்டி, சீராட்டி வளர்ப்பது என்பது பல நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பதற்கு சமம் என்றால் அது மிகையல்ல... ஒருநாள் நாம் வீட்டில் இருந்து, குழந்தைகளின் தேவைகளை முழுமையாக கவனித்துப் பார்த்தால் இதன் முக்கியத்துவம் புரியும். அது மட்டுமல்ல, காலையில் பால்காரனில் தொடங்கி, பேப்பர்காரன், மளிகை கடை, காய்கறி கடை, சமையல், வீட்டை சுத்தம் செய்தல், துணி துவைத்தல் என அவர்கள் கையாளும் வேலை, பார்ப்பதற்கு எளிதாக தெரிவதற்கு காரணமே, அவர்கள் அந்த வேலைகளை அநாயசமாக கையாளும்வது தான்... இத்தனையும் தாண்டி, அலுவலகத்தில் இருந்து திரும்பும் கணவனை முகமலர்ச்சியுடன் வரவேற்று உபசரிப்பதிலாகட்டும், இரவில் தாம்பத்யம் புரிவதிலாகட்டும், குடும்பத் தலைவியின் பங்கு எதனாலும் எடை போட இயலாதது. இந்த அனைத்து செயல்களிலும் தன் குடும்பம் என்ற ஒன்றேதான் சுயநலமாக வெளிப்படும்.

அப்படிப்பட்ட குடும்பத் தலைவியின் பங்கை, தற்போது பணத்தால் ஈடுகட்ட முயற்சிப்பது தான் இந்த சட்டத்தின் நோக்கம் என்று ஒருசாராரும், இல்லை... இல்லை.... பொருளாதாரத்தில் அவர்கள் யாரை நம்பியும் இருக்க வேண்டியதில்லை என்ற நிலையை ஏற்படுத்துவதுதான் என்று அரசு தரப்பிலும் கூறுகின்றனர்.

எது எப்படி இருந்தாலும், இந்த உலகத்தில் இன்னும் வெகுசில விஷயங்களில் மட்டும்தான் பணத்தின் தாக்கம் முழுமையாக இல்லாமல் உள்ளது. அதில், உறவுகளுக்கு இடையே நிலவும் உண்மையான அன்பு மிக முக்கியமானது. குறிப்பாக, உண்மையான கணவன்- மனைவி உறவு என்பது, இந்த கமர்ஷியல் விளைவுகளுக்கு அப்பாற்பட்டது. அதிலும், சம்பளம் நிர்ணயித்து விட்டால், பிறகு சம்பளத்துக்கு ஏற்ற வேலை; வேலைக்கு ஏற்ற சம்பளம் என்ற எதிர்பார்ப்புகள் தோன்றாதா...? பணம் தொடர்பான எதிர்பார்ப்பு என்றைக்காவது மனிதனுக்கு திருப்தியைத் தருமா? பாசத்துக்கும் நேசத்துக்கும் அன்புக்கும் விலை நிர்ணயிப்பது தகுமா? குடும்பம் என்பது நமது நிதி அமைச்சகத்தின் திட்டங்களை எல்லாம் தாண்டியதல்லவா? அரியணைக்கு அப்பாலும் அஸ்தினாபுரம் உள்ளதைப் போல, சட்டதிட்டங்களை தாண்டியதல்லவா “குடும்பம்” என்ற நமது அற்புதமான கட்டமைப்பு...!!! அதை சிதைக்காமல் விட்டு வைப்போம்...!!!
பிம்பங்கள்...!

ள்ளதை உள்ளபடி காட்டுவதில் கண்ணாடிக்கு நிகர் வேறெதுவும் கிடையாது. நாம் குறிப்பிடுவது, முறையாக தயாரிக்கப்பட்ட கண்ணாடி... இத்தகைய கண்ணாடி ரசம் போனபின்னும் சிதையாத பிம்பத்தைக் காட்டக்கூடிய வல்லமை கொண்டது. மனித மனமும் கண்ணாடி போன்றதுதான்... ஆனால், ஒரே வித்தியாசம், உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்ள மனித மனம் எப்போதுமே விரும்புவதில்லை. அது, தங்கள் வசதிக்கு ஏற்றவாறு ஒரே பிம்பத்தை பல கோணங்களில் மாற்றிக் கொள்வதிலும், போலி அழகுக்கும், பொய்மைக்கும், சுயநலத்துக்கும் அளிக்கும் முக்கியத்துவங்களும் சொல்லில் வடிக்க முடியாத ஒன்று....

மனதின் இந்த குணத்திற்கு என்னதான் காரணமாக இருக்க முடியும்...? சற்றே ஆழ்ந்து சிந்தித்தால், குழந்தை முதலே யதார்த்தத்தை சொல்லித் தராமல், பொய்யான அழகையும் போலியான தேனொழுகும் பேச்சையும் குழந்தைப் பருவம் முதல் ஊட்டி வளர்க்கும் நமது பாரம்பரியம் இதில் மிகப்பெரிய பங்கை வகிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை...

உண்மை சுடும் என்பது சொல்வாக்கு... ஆம்! சிறு வயது முதலே அந்த சூட்டை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனம், அதிலிருந்து மெல்ல விலகி விலகி, வெகுதூரம் சென்று விடுகிறது. பள்ளிப் பருவத்தில் நன்றாகப் படிக்கும் மாணவனை ஆசிரியர் பாராட்டும்போது, நமது மனதில் அனாவசிய கோபம் உதயமாகிறது; நாம் நன்றாகப் படிக்காததால்தானே நமக்கு பாராட்டு கிடைக்கவில்லை என்ற உண்மை உரைத்தாலும், அதை ஏற்றுக்கொள்ள மறுத்து, அந்த ஆசிரியர் பாரபட்சம் காட்டுவதாகவே கோபம் ஏற்படுகிறது. அந்த இடத்தில் ஆசிரியரின் பிம்பம் நமக்கு வேறுவிதமாகவே தோன்றுகிறது.

கல்லூரி பருவத்தில் நம் கருத்தைக் கவர்ந்த பெண்ணின் உள்ளம், இன்னொருவரின் பால் நிலைகொண்டுள்ளது என்பது நமக்கு ஆற்ற முடியாத எரிச்சலை ஏற்படுத்துகிறது. அந்த இருவரின் மனமும் பல்வேறு காரணங்களினால் ஒரே அலைவரிசையில் பயணிப்பதால் தான் அவர்களுக்கு இடையே அந்த ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதை நம்மால் உணர முடிந்தாலும் உளமாற ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. தேவதை போன்ற அந்த பெண்ணின் பிம்பம் திடீரென அரக்கியாக தோன்றுகிறது.
கலாட்டா பருவங்களை எல்லாம் கடந்து, வேலை, குடும்பம், பொறுப்புகள் என்று ஆனபின், ஒவ்வொரு பிம்பங்களையும் மனம் ஏற்றுக்கொள்ளும் விதமே அலாதியானது. அதிலும், குடும்பத்தில் நுழைந்தாலோ, இல்லறத் துணைகளிடம் நாம் வெளிப்படுத்தும் பிம்பம், நாம் காணும் பிம்பம் எந்த நடிகர் திலகத்தினாலும் நடிக்க முடியாது என்பதுதான் அக்மார்க் உண்மை.

அனைத்திற்கும் மேலாக, பணிபுரியும் இடங்களில் நாம் நடந்து கொள்ளும் விதம், மற்ற பிம்பங்களை நம் மனதில் எப்படி தெரிகிறது என்பதை விட, நமது பிம்பத்தை நாமே பிரயத்தனப்பட்டு போலியாக மாற்றிக் கொள்ளும் ஆர்வம் இருக்கிறதே... சொல்லில் விவரிக்க முடியாது... ஒருகட்டத்தில், நம்முடைய உண்மையான பிம்பம் எதுவென்பது நமக்கே தெரியாமல் போவதுதான் இதன் உச்சகட்டம்... மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக நமது நடை, உடை, பாவனை அனைத்தையும் மாற்ற முயன்று, முழுமையாக மாறவும் முடியாமல், இயல்பாக இருக்கவும் முடியாமல் திரிசங்கு நிலையைத்தான் பெரும்பாலோர் அடைகின்றனர். சக ஊழியர்களிடம் பழக்கம் என்பதோ, போலியான சிரிப்பை அணிந்து கொண்டு, பொய்யான நலம் விசாரித்து, தகுதியற்ற புகழுரைகளை உரைத்து, தேவையற்ற ஆச்சரியங்களை வெளிக்காட்டி நாம் நடத்தும் நாடகங்கள் நவரசங்களையும் மிஞ்சி, நம்மை குறித்த மிக நிச்சயமான தவறான பிம்பத்தை நிலைநிறுத்தி விடுகிறது. சிறுவயது முதலே தேன் தடவிய சொல்லையே எதிர்பார்க்கும் மனம் என்பதாலோ என்னவோ, சர்க்கரைக்கும் சர்க்கரை போன்ற சாக்ரீனுக்கும் வித்தியாசம் உணர முடியாமல் செய்து விடுகிறது. நம்முடைய நியாயமான, அவசரமான நேரங்களில் யார் ஆதரவு கரம் நீட்டக்கூடியவர் என்பதை விட, எந்த நிமிடமும் நம்மைப் பற்றி போலியாகவே புகழுரைக்கும் நபரின் பிம்பமே மிகவும் அழகாக தெரிகிறது.

நிஜமான ஆசைகளை, தேவைகளுக்காக புதைத்துக் கொண்டு, நாகரீகம், நளினம் என்ற பெயரில் நம்மையே தொலைத்து, பொய்யான பிம்பமாக மாறிச்சென்று கொண்டே இருப்பதில், நவீன கார்ப்பரேட் நிறுவனங்களும், மாய சினிமா உலகமும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன என்றால், அது மிகையல்ல... பொருந்தாத கோட்- சூட் அணிவதிலாகட்டும், பேரிளம்பெண்களும் ஒப்பனை என்று ஒவ்வாத உடை அலங்காரம் செய்வதிலாகட்டும், நமது அடிப்படை பிம்பத்தை அடியோடு மாற்றி அமைப்பதில் முன்னோடியாக உள்ளன. அங்கு தொலையும் நமது பிம்பத்தை எங்கு கண்டெடுப்பது என்பதை என்றுமே அறியாமல், வெறும் அரூபங்களாகவே வாழ்ந்து மறைகிறோமே, இதற்காகவா பிறப்பெடுத்தோம்? எந்த பிம்பத்தில் இருந்து சிந்திப்பது என்பது கூட அறியாத பேதைகளாகி விட்டோமே...! உண்மையான மனித பிம்பத்தை எங்கு காண்போம்? எந்த பிம்பத்தில் நாம் இருந்தால் காண்போம்? விடை தர ஒரு உண்மையான பிம்பம் உலகில் உண்டென்றால், கண்ணில் காட்டுங்களேன்...!