“உன் கண்ணில் நீர் வழிந்தால், என் நெஞ்சில் உதிரம் கொட்டுமடி;
என் கண்ணின் பாவையன்றோ, கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ”
என் கண்ணின் பாவையன்றோ, கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ”
-ஆனால், சமீபத்தில் நடைபெறும்
சம்பவங்களைப் பார்த்தால், இந்த வார்த்தைகள் தலைகீழாக மாறிப்போனதை உணர முடிகிறது.
தனது அன்பு நிராகரிக்கப்பட்டதை தாங்கிக் கொள்ள இயலாமல் பெண்களை கொலை செய்யும்
செய்திகளை தினம்தினம் படிக்கும்போது நெஞ்சு பதறுகிறது...
மனித வாழ்க்கையின் மிக உன்னதமான அம்சம்
அன்பு என்பது நமது குருதியிலேயே கலந்த ஒன்று... குறிப்பாக, தமிழக இலக்கியங்களிலும்
கலாச்சாரத்திலும் அன்பு என்ற சொல்லுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மிகவும்
உணர்வுபூர்வமானது. கால காலமாக நாம் பார்த்த திரைப்படங்களில் தனது அன்பு
நிராகரிக்கப்பட்டாலும், அதன் உண்மைத் தன்மை மாறாமல் காத்து வரும் தியாகிகளைத்தான்
கண்டிருக்கிறோம்... ஆனால், சமீப காலமாக, திரைப்படங்களில் “அட்ரா அவளை... வெட்றா
அவளை” என்பன போன்ற வரிகளை அதிகம் கேட்கவும், காணவும் நேரிடுகிறது...
உண்மையில், அன்பு என்பதின் உண்மையான நிலை
என்ன? என்று மனசாட்சியுடன் சிந்தித்தால், “கலியுகத்தில் முதலில் காணாமல் போனது
அன்பு” தான் என்பதை எளிதாக உணர முடியும்... அதிலும், ஆண்- பெண் இருவரிடையேயான
உண்மையான நட்பு தான் முதலில் பலியாகியுள்ளது என்றால், அது மிகையல்ல.
பொதுவாக, ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும்
இடையிலான நட்பு என்பதில் இருவரும் மேலோட்டமாகவே இருந்து விட்டாலோ, இருவருமே
உண்மையான ஆழமான நட்பு கொண்டிருந்தாலோ அது பிரச்சினையில் முடிவதில்லை; இரு மனங்களையுமே
காயப்படுத்துவதில்லை. ஆனால், இரண்டில் ஒருவர் உண்மையான அன்பு கொண்டிருந்த போது,
மற்றொருவர் மேலோட்டமான உணர்வை கொண்டிருக்கும் போது தான் மனங்கள் காயப்படுவதும்
அதைத் தொடர்ந்து பிரச்சினைகள் எழுவதும் நடைபெறுகிறது.
ஆனால், அன்பின் உண்மையான அடிப்படை
தத்துவம் என்னவாக இருக்க முடியும்? நாம் உண்மையான அன்பு செலுத்திய ஒருவர்,
நம்மிடம் பதிலுக்கு இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது
நியாமாக முடியுமா? அது வியாபாரமாகி விடாதா? தூய்மையான அன்பை ஒருவர் மீது செலுத்தி
விட்ட பிறகு, அவர்களிடம் இருந்து நமக்கு உண்மையான அன்பு பதிலுக்கு கிடைக்கவில்லை
என்றாலும் அவர்களுடைய நலனை நாடுவது மட்டும்தானே மாசற்ற அன்பாக இருக்க முடியும்?
இதை சரியாக உணராமல், பழிக்கு பழி வாங்குவது என்பது, தனது அன்பை தானே
இழிவுபடுத்திக் கொல்வதாகத்தானே இருக்க முடியும்?
இந்த நவநாகரீக காலத்தில் பெண்களின்
சுதந்திரம் அதிகரித்து வரும் அதே வேளையில், ஆடம்பரமான வாழ்வு பெரும்பாலான
பெண்களின் கண்களையும் கருத்தையும் கவரும் நிலையில், பல பேருக்கு நட்பு என்பது
பொழுதுபோக்கு என்பதை தாண்டி வேறொன்றும் இல்லை என்றாகி விட்டது. ஈஸ்கேப்களிலும்,
மாயாஜால்களிலும் சினிமாவும், KFC உணவும், லைஃப்
ஸ்டைல்களில் ஆடைகளும், நவீன கேட்ஜெட்களும் இந்த போழுதுபோக்கின்போது அவர்களுக்கு
முக்கிய அம்சமாக அமைந்து விடுகிறது. மேலோட்டமாக பழகும் ஆண்களுக்கோ, அழகும்,
கவர்ச்சியும் மட்டுமே கண்களுக்கு புலப்படுகிறது.
பிறகு, வாழ்க்கையின் முக்கியமான
படிக்கட்டில் கால் பாதிக்கும் போது, இவற்றை எல்லாம் தாண்டி வெளிநாடு, சொகுசு கார்
மற்றும் நிலையான எதிர்காலம் கண்ணுக்குத் தெரியும்போது, பழைய நட்பு வேண்டாத ஒன்றாக
மாறி விடுகிறது. ஆனால், சூழலின் யதார்த்தம் தெரியாத மற்றொரு தரப்போ, ஏமாற்றத்தின் பிடியில்
சிக்கி, புத்தி பேதலித்து விபரீதத்தில் இறங்கி விடுகிறது. வன்முறையில் இறங்கும்
அளவுக்கு கொடூரமாக மாறிவிடுகிறது. ஆனால், இதிலும், தங்களது எதிர்ப்பையோ
ஏமாற்றத்தையோ பெண்களால் வெளிக்காட்ட இயலவில்லை என்பது உண்மைதான்... (போலீஸ்
நிலையத்துக்கு சென்று நியாயம் கேட்கும் ஒரு சில பெண்களைத் தவிர...)
உண்மையில் அன்பு என்பது எதையும்
எதிர்பாராதது; அன்பு கொண்டவர்களுக்கு நல்லது தவிர வேறு எதையும் நாடாதது என்பது
நன்கு புரிய வைக்க வேண்டும். சுயநலம் என்பது துளியும் இல்லாதது என்பதை உணர்த்த
வேண்டும்; “என்னுயிர் நின்னதன்று என்று இருக்க வேண்டுமே தவிர, உன்னுயிர் என்னது
என்று இருக்கக் கூடாது” என்பதை புரிய வைக்க வேண்டும். ஆனால், எல்லாமே
இயந்திரத்தனமாக, பொருள் சார்ந்து, சுயநலம் மிக்கதாக மாறி விட்ட பிறகு, இதை கற்றுக்
கொடுக்க கூட யார் இருக்கப் போகிறார்கள்?
அதனால்தான் சொல்கிறேன்... கலியுகத்தில்
மனித வாழக்கையில் காலாவதியான முதல் அம்சம் அன்பு தான்...!!!
No comments:
Post a Comment