விதுர நீதி!

புராண காலம் தொடங்கி, இன்றைய நவீன காலம் வரை எவ்வளவோ அமைச்சர்கள் தங்கள் மதிநுட்பத்தை பல்வேறு விதமாக, பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால், திருதராஷ்டிரன் அமைச்சரவையை அலங்கரித்த விதுரன் போன்ற மதிநுட்பமும், நேர்மையும், யாருக்கும் அஞ்சாமல் நல்லவற்றை எடுத்துரைத்தல் போன்றவற்றில் விதுரனுக்கு இணையாக சொல்லக்கூடியவர்கள் வெகு சிலரே! காலத்தை வென்று நிற்கும் விதுரநீதி, இன்றைய அரசியல்வாதிகளுக்கு மிகவும் பொருந்தக்கூடியது! விதுரநீதியில் லட்சத்தில் ஒரு பங்கு நமக்கு கைகூடினாலும் அது நாம் செய்யும் பாக்கியமே!


Saturday, April 17, 2010

நக்சல் பிரச்சினை – தீர்வு கிட்டுமா?

வணக்கம்! பெரும்பாலான நாடுகளுக்கு மட்டுமல்ல- உலகம் முழுவதற்குமே இன்று மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்குவது தீவிரவாதம் தான்! மொழி- மதம்- இனம், வறுமை, அதிகாரப் போட்டி என பல்வேறு முகங்கள் தீவிரவாதத்திற்கு மூல காரணமாக இருந்தாலும், விளைவு என்னவோ ஒன்றுதான்! ஆம்! அப்பாவி மக்கள் மற்றும் தேசத்தின் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் வீரர்களின் விலைமதிப்பில்லா உயிர் போவதும்- அதனால் அந்த குடும்பங்களில் திணிக்கப்படும் சோகங்களும்தான்!

கடந்த வாரம் நக்சல்பாரிகளின் கொடூரத் தாக்குதலுக்கு 76 ஜவான்கள் பலியாகி இருப்பது சமூக அக்கறையுள்ள ஒட்டுமொத்த இந்தியர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்து விட்டது! இறந்தவர்கள் பட்டியலில் அனைத்து மாநில ஜவான்கள் பெயர்களையும் பார்த்தவர்கள், இந்த ஆற்ற இயலாத சோகத்தின் பின்னணியில் இழையோடிய இந்திய ஒருமைப்பாட்டை பார்த்து பெருமைப்படுவதா அல்லது அழுவதா என்று தவித்தனர்.

இந்த இழப்பிற்கு பொறுப்பேற்க வேண்டியது யார் என்ற வழக்கமான சர்ச்சையை, “நானே பொறுப்பேற்கிறேன்” என்று அறிவித்து முற்றுபுள்ளி வைத்த உள்துறை அமைச்சர் திரு ப. சிதம்பரம் நிச்சயம் பாராட்டுக்குரியவர். அவர் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என்று அறிவித்த மன்மோகன்சிங்கும் பாராட்டப்பட வேண்டியவரே! அது மட்டுமல்ல, “இது ஒட்டுமொத்த தேசத்தின் துயரம்; இதற்கு அமைச்சரை குறை சொல்வதை விட்டுவிட்டு, இதுபோன்ற நாசகார செயல்களை அறவே அழித்தொழிக்கும் வழிமுறைகளை மேற்கொள்வதே இத்தருணத்தின் தலையாய தேவை” என்று ஆணித்தரமாக கூறியதன் மூலம், பொறுப்புள்ள- தேசநலத்தை முதன்மையாகக் கொண்ட எதிர்க்கட்சியாக தங்களை வெளிப்படுத்தியுள்ள பா.ஜ.க. மிகச் சிறந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதே சமயம், “இனியும் அரசு பொறுத்துக் கொண்டிருக்காது” “தீவிரவாதத்தின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம்” என்பன போன்ற வழக்கமான அறிக்கைகள் விடுவதோடு நின்று விடாமல், இவ்வளவு பின்தங்கிய மாநிலங்களில் செயல்பாடும் தீவிரவாத இயக்கங்களுக்கு அதிநவீன ஆயுதங்கள் எப்படி கிடைக்கின்றன? அதை வாங்குவதற்கான பணவசதி எப்படி கிடைக்கிறது? எந்தெந்த நாடுகள் பின்னணியில் இருக்கின்றன? பிரச்சினைகளின் ஆணிவேர் எங்கிருக்கிறது? என்பதை எல்லாம் தெளிவாக ஆராய்ந்து, உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலமே, மக்களுக்கு நம்பிக்கையூட்ட முடியும்.

உள்துறை அமைச்சர் செய்வாரா?

No comments:

Post a Comment