ஐ.பி.எல். – இந்திய கிரிக்கெட் திருவிழா! பாகிஸ்தானுடனான தீவிரவாதம் குறித்த பிரச்சினைகள், நக்சலைட்டுகள் அச்சுறுத்தல், விலைவாசி ஏற்றம், மின்வெட்டு தொந்தரவு, தண்ணீர் பிரச்சினை, மாணவர்களின் தேர்வு, போலி மருந்து நடமாட்டம், ஏன்- நித்யானந்தாவை கூட மறக்கடிக்கும் அற்புதமான போதை வஸ்து!
சந்தோஷத்துடன் சங்கடத்தையும் கொண்டு வருவதுதானே “போதை”யின் விசேஷ அம்சம்! ஏற்கனவே பல நூறு கோடிகளுக்கு ஏலம் விடப்பட்ட எட்டு அணிகள் மூலம் கிடைத்த பணம் போதாதென்று இன்னும் இரண்டு அணிகளுக்கான ஏலம் விடப்பட்டது. முப்பது கோடி மக்களுக்கு மேற்பட்டோர் வறுமைக் கோட்டுக்கு கீழே- அரை வயிற்றுக் கஞ்சியோடு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் நாட்டில், ஒரு கிரிக்கெட் அணியை ஏலத்தில் எடுக்க 1500 கோடிக்கும் மேல் கொட்டிக் கொடுக்கப்பட்டதை பார்த்து உலகமே வாயை பிளந்தது!
கொச்சி அணியை ஏலம் எடுத்த அமைப்புக்குப் பின்னணியில் இருந்த மத்திய அமைச்சர் குறித்து ஐ.பி.எல். பிதாமகன் லலித் மோடி புகார் பட்டியல் வாசிக்க, பதிலுக்கு அமைச்சர் தரப்பும் மோடி மீது புகார் கனைகளை வீச, களத்தில் ஆடப்படும் ஆட்டத்தை விட, திரைக்கு மறைவில் நடக்கும் இந்த ஆட்டம் மக்களுக்கு சுவாரசியத்தை தந்துள்ளது.
ராஜாஜி முதல்வராக இருந்தபோது சென்னையில் நடந்த கிரிக்கெட் போட்டியை பார்க்க அவருக்கு டிக்கெட் அனுப்பப்பட்டது. அந்த டிக்கெட்டை அவரது பேரன் கேட்க, ராஜாஜி அளித்த பதில் என்ன தெரியுமா? “இது தமிழக முதல்வர் என்ற முறையில் எனக்கு அளிக்கப்பட்ட டிக்கெட். அதை என்னுடைய பேரன் என்ற உரிமையில் நீ உபயோகப்படுத்திக் கொள்வது தார்மீகப்படி மிகவும் தவறு” என்று மறுத்து விட்டாராம்.
இப்படி மிக உயர்ந்தபட்ச நெறிகளோடு நமது முன்னோர்கள் அரசியல் நடத்திய நாடு இது. ஆனால், இன்று நடப்பது என்ன? ஒரு கிரிக்கெட் அணியை ஏலம் எடுக்க உதவி செய்ததற்காக, அமைச்சருக்கு நெருக்கமான பெண்மணி ஒருவருக்கு அணி உரிமையில் இலவச பங்கு அளிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் உண்மை இருக்கிறதா என்ற ஆராய்ச்சிக்குள் நாம் இறங்க வேண்டாம். ஆனால், உண்மையில் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த மிகப்பெரிய கேள்விக்குறி நம்முன் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
கேரளாவின் முன்னேற்றத்திற்காகவே அணியை ஏலம் எடுக்க உதவியதாக அமைச்சர் கூறுகிறார். கிரிக்கெட் அணியை ஏலம் எடுப்பதிலா மாநிலத்தின் முன்னேற்றம் உள்ளது? கால்பந்து மற்றும் தடகளத்தில் எப்போதுமே சிறந்து விளங்கும் மாநிலம் கேரளா. அந்த விளையாட்டு வீரர்களை மேம்படுத்தவோ, ஊக்கப்படுத்தவோ அமைச்சர் ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டிருப்பாரா?
படிப்பறிவில் முதலிடத்தில் இருந்தாலும், வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கியே இருக்கும் ஒரு மாநிலத்திற்கு மைய அமைச்சர் செய்ய வேண்டியது இதுவா? ஐ.நா. சபையில் உயர்பதவியில் இருந்தவர், நமது மாநில முன்னேற்றத்திற்கு சிறப்பான திட்டங்களை வகுத்து அதை செயல்படுத்தியும் காட்டுவார் என்ற எதிர்பார்ப்பில்தானே, பழைய ஆட்களை தவிர்த்து இவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர்? சர்ச்சைக்கு மேல் சர்ச்சை என தனது நேரத்தை வீணடிக்கவா அனுப்பி வைத்தனர்?
கோட்டு ஸூட்டை துறந்து, வெள்ளை பைஜாமா அணிந்து கொள்வதால் மட்டுமே ஒருவர் தூய அரசியல்வாதி ஆகிவிட முடியாது. மக்களோடு மக்களாக கலந்து, அவர்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்து, அவர்களின் முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயலாற்றுபவர்களுக்கு மட்டுமே சரித்திரத்தில் இடம் கிடைக்கும்- கிரிக்கெட் அணியோடு தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளத் துடிப்பவர்களுக்கு அல்ல!
அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, மதிப்பெண் போடுவது பிரதமரின் வழக்கம். மதிப்பெண் போடுவது மட்டுமல்லாமல், அமைச்சர்களின் பணி என்ன? அவர்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டிய திட்டங்கள் எவை? என்பன குறித்த பாடத்தை இவர்களுக்கு கற்றுத் தருதல் இந்த தருணத்தின் மிக முக்கிய அவசியம் என்பதை பிரதமருக்கு யாராவது எடுத்து சொன்னால் நன்று!
No comments:
Post a Comment