சமீபத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய இரண்டு தீர்ப்புகள் பலரது புருவத்தை உயர்த்தியது. முதலாவது தீர்ப்பு, “விருப்பப்பட்டு கொடுக்கப்படும் வரதட்சணையைப் பெற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை” என்பதாகும். மற்றொன்று, “மணமகன்- மணமகள் சம்மதத்தோடு செய்யப்படும் மைனர் திருமணம் செல்லுபடியாகும்” என்று அளிக்கப்பட்ட தீர்ப்பு.
இந்திய சமூக அமைப்பில் “வரதட்சணைக் கொடுமை” என்பது எண்ணற்ற குடும்பங்களில் தினம் தினம் சூறாவளியை வீசிக்கொண்டேதான் இருக்கிறது... மாட்டை விலைபேசுவது போல மணமகளை விலைபேசும் அவலத்தை நீக்குவதற்கான போராட்டத்தில் ஓரளவுக்கு வெற்றி பெற்று இருக்கிறோம் என்று நம்பிக்கொண்டு இருந்தவேளையில், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு வரதட்சணைக் கொடுமை ஒழிப்பில் ஈடுபட்டிருக்கும் சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் பேரிடியாகத்தான் அமைந்திருக்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு நெருங்கிய உறவினர் ஒருவர் தனது மகனின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க வந்திருந்தார். அவருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, “தனது மகனுக்கு 150 சவரன் நகை வரதட்சணையை பெண் வீட்டார் கொடுப்பதாக” குறிப்பிட்டார். “அவர்கள் கொடுக்கிறார்களா? அல்லது நீங்கள் வற்புறுத்தி வாங்குகிறீர்களா?” என்று நான் கேட்டேன்.
அதற்கு அவர் கூறிய பதில், நாம் இன்னும் எந்த மாதிரியான மாயையில் வாழ்கிறோம் என்பதை எனக்கு உணர்த்தியது. “எனது சகோதரர் மகனுக்கு 125 சவரன் நகை வரதட்சணையாக தந்தார்கள். அதை விட அதிகமாக வாங்கினால்தான் நமக்கு கவுரவமாக இருக்கும் என்று எனது மனைவி உறுதியாக கூறிவிட்டார். இதை பெண் வீட்டாரிடம் சொல்லியபோது, அவர்களும் ஒத்துக்கொண்டனர்” என்று வெகு இயல்பாக கூறினார்.
எவ்வளவோ துறைகளில் இந்தியா படுவேகமாக முன்னேறி விட்டது என்று நாம் நெஞ்சை நிமிர்த்திக் கொள்கிறோம். ஆனால், என்றென்றும் இணைந்து வாழப்போகும் இல்லற வாழ்க்கையில் வரதட்சணைக் கொடுமையை இன்னும் நாம் விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதும், அதற்கு வறட்டு கவுரவம் காரணமாக இருப்பதும், நாம் நாகரீக முகமூடி அணிந்த காட்டுமிராண்டிகள் தான் என்பதை எனக்கு மிகத் தெளிவாகவே உணர்த்தியது. அதிலும், வரதட்சணை பேரங்களுக்கு பின்னால் பெண்களே மிக முக்கிய பங்கு வகிப்பது, இந்த பிரச்சினையை ஒழிப்பதில் பெரிய தடைக்கல்லாக விளங்குகிறது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வேறு வரதட்சணை பிரச்சினைக்கு எதிரான போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் விதமாக அமைந்து விட்டதை மறுப்பதற்கில்லை.
மற்றொரு தீர்ப்பு மைனர் திருமணம் பற்றியது. ஒருகாலத்தில் இந்தியப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளில் மிக முக்கியமானது பாலிய விவாகமும், உடன்கட்டை ஏற்றுதலும்தான்! ராஜாராம் மோகன் ராய் போன்ற பெருந்தலைவர்களின் அயராத முயற்சியின் விளைவாக உடன்கட்டை கொடுமை ஒழிக்கப்பட்டு விட்டாலும், பாலிய விவாகம் மட்டும் முற்றிலும் ஒழிக்கப்படாமல் ஆங்காங்கே தலைநீட்டிக் கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, மணமக்களின் சம்மதத்தோடு நடைபெறும் பாலிய விவாகங்களை அங்கீகரிக்கலாம் என்கின்ற ரீதியில் அமைந்து விட்டது இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளைத் தோற்றுவித்து இருக்கிறது.
நாட்டின் பிற்பட்ட கிராமங்களில், வறுமை மற்றும் அறியாமை காரணமாகத்தான் இத்தகைய திருமணங்கள் இன்னும் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. பெண் குழந்தை என்பதே மிகப்பெரிய சுமை என்று கருதும் பிற்போக்குத்தனமான மக்களிடையே இவ்வித பழக்கம் அதிகமாக உள்ளது.
12, 13 வயதே நிரம்பிய நிலையில், உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் எந்தவித பக்குவத்தையும் எட்டாத சிறுமிகளிடையே மனப்பூர்வமான சம்மதத்தை பெறுவது என்பது எவ்வளவு பெரிய ஏமாற்றுவேலை என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான்! “மனப்பூர்வமான” என்கின்ற விஷயத்தில் எந்த அளவுகோலை இந்த தீர்ப்பில் பயன்படுத்தினார்கள் என்பதும் கேள்விக்குரிய விஷயம்தான்!
மொத்தத்தில் சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளையும், பிற்போக்கு கொடுமைகளையும் களைய வேண்டிய போராட்டத்தில், சட்டத்தின் உச்ச அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள்தான் மிக முக்கிய பங்கு வகிக்க வேண்டும். ஆனால், அவர்களே வேறுவிதமாக தீர்ப்பு அளிக்கும்போது, நம்மை நாமே நொந்து கொள்வதைத் தவிர வேறு என்ன வழி?
தங்கப்பதக்கம் திரைப்படத்தில் வருவது போல, “அந்த தெய்வமே கலங்கி நின்றால், யாரிடமே போய் முறையிடுவது?”
வணக்கம் விதுரன்.
ReplyDeleteஅந்த நீதிமன்ற (அ)நீதிமான்கள் எந்த பெட்டிக்காக இந்த மாதிரி தீர்ப்பு தருகின்றார்கள் என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம்.
அறியாமல், தெரியாமல் செய்பவர்களை தடுக்கத்தான் நீதிமன்றம் இருக்கின்றது என நிணைத்தால் இல்லை அப்படி இல்லை தவறு செய்பவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பை வழங்குகின்றது.
உச்ச அநீதி மன்றம் இன்னும் மனு அதர்மத்தில்தான் ஊறியுள்ளது. ராமனை ஒளித்து வைத்துக் கொண்டு சேது சமுத்திரத் திட்டத்தை ஒழிக்கப் பார்க்கிறார்கள். காஞ்சி சுப்புணி ஒரு நாள் உச்ச அநீதி மன்றம் வந்தால் அத்தனையும் எழுந்து நிற்கும்.( ஒன்று,இரண்டு தப்பினால் பெரிய செய்தியாகி விடும்.)
ReplyDelete